யாழ்ப்பாணம் – சென்னை இடையில் 16ம் திகதி முதல் தினமும் விமானசேவை… |

யாழ்ப்பாணம் – சென்னை இடையில் எதிர்வரும் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் விமானசேவை முன்னெடுக்கப்படும் என இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்திய பயண முகவர் சங்கத்தின் 67ஆவது மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் வெளியிட்டிருந்த செய்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கும் இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான சேவை வாரத்திற்கு நான்கு முறையிலிருந்து தினசரி சேவைகளாக ஜூலை 16 முதல் அதிகரிக்கப்படவுள்ளன.

இந்த தினசரி விமான சேவைகளை முன்னெடுப்பதானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உரையில், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

வர்த்தகம், உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்களால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடனான எமது கூட்டாண்மையானது, இத்துறையில் குறுகிய கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும்,

உலகளாவிய விமான போக்குவரத்து சுற்றுச்சூழலில் அதிகாரம் மற்றும் செல்வாக்கின் முக்கிய அணுகலாக மாறுவதற்கும் ஒரு அரிய வாய்ப்பை வழங்குவதாக  நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்தியாவிலிருந்து கொழும்புக்கு 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்திய பயண முகவர் சங்கத்தின் மாநாடு, 18 வருட இடைவெளிக்குப் பின்,

இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஜூலை 6 முதல் 9 வரை, இந்தியாவில் இருந்து முதன்மையாக 700 பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று தொடர்பு, இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது.

இம்மாநாட்டை முதலில் கொழும்பில் ஏப்ரல் 19 முதல் 22 வரை நடத்த திட்டமிடப்பட்டது. எனினும் இலங்கையில் நிலவிய பதற்றமான சூழல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால் இன்று, இலங்கை அதன் மறுமலர்ச்சிப் பாதையில் இருப்பதால், பிராந்திய சுற்றுலா வலையமைப்பை மேம்படுத்துவதற்காக மாநாடு கடந்த வருடம் திட்டமிட்டபடி இவ்வருடம் இடம்பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews