சந்திரிக்கா அரசாங்கத்தினால் வான் குண்டுகளால் கொல்லப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்

28 வருடங்களுக்கு முன்னர், விமானப்படையினர் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டுவீசி படுகொலை செய்யப்பட்ட வடக்கின் 150ற்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள்  நினைவுகூரப்பட்டுள்ளனர்.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதி, நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீகதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படை நடத்திய குண்டுத்தாக்குதலில், சிறுவர், பெண்கள் உள்ளிட்ட 147 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தின் 28ஆம் ஆண்டு நினைவுதினம், நேற்று முன்தினம், உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

சென். பீட்டர்ஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக மலர்தூவியும்,  மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர் குண்டுகள்

1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம், யாழ்ப்பாணம் நவாலியில் உள்ள சென். பீட்டர்ஸ் மற்றும் சென். போல் தேவாலயம் ஆகியன போரிலிருந்து தஞ்சம் மற்றும் பாதுகாப்பு கோரிய தமிழர்களால் நிரம்பியிருந்த நேரத்தில் விமானப்படையின் தொடர் தாக்குதல்கள் நடந்தன.

பாதுகாப்பு கருதி பொது இடங்களுக்கு செல்லுமாறு அரச பாதுகாப்பு படையினர் விடுத்த பகிரங்க அறிவிப்பை அடுத்து மக்கள் வணக்க ஸ்தலங்களுக்கு சென்றுள்ளனர்.


நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் கூற்றுக்கு அமைய, ஜூலை 09, 1995 அன்று சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியின் போது, சுமார் 4.30-5.00 மணியளவில், “புகாரா” விமானம் நவாலி தேவாலயம், கதிர்காமம் முருகன் கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது 8-13 குண்டுகள் வீசப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.

வடகிழக்கு மனித உரிமைகள் பணியகத்தின் அறிக்கையின்படி, தாக்குதலின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 155 ஆகும்.

கொல்லப்பட்டவர்களில் 4 வயது குழந்தை மற்றும் 68 வயதுடைய இருவர் அடங்குகின்றனர்.

கொல்லப்பட்டவர்களில் 45 பேர் நவாலியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் போரில் தங்கள் இடங்களை இழந்து வேறு பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றவர்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் கத்தோலிக்க தேவாலயம், இந்து கோவில் மற்றும் சுமார் 30 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

“வான் குண்டுவீச்சினால் ஏற்பட்ட காயங்களால் மரணம்” என அரசு மரணச் சான்றிதழ்களை வழங்கியிருப்பது, குண்டுத் தாக்குதலை இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டதாக உள்ளூர்வாசிகள் முன்வைத்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews