யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டம் மண்டைதீவு – கடற்படை முகாமிற்கு அருகில் இன்றைய தினம் (12.07.2023) காலை முன்னெடுக்கப்பட்டது.
வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று (12.07.2023) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த அளவீட்டுப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் இன்று (12.07.2023) காலை.7.30 மணியளவில் மண்டைதீவு கிழக்கில் நடைபெறவுள்ள எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கடற்படை முகாம் முன்பாக பொலிஸார் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். கலகமடக்கும் கடற்படையினர் தயார் நிலையில் இருந்ததுடன் கடற்படையினர் போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்து கொண்டிருந்தனர்.
போராட்டத்தின் நிறைவில் போராட்டகாரர்களுக்கு பிஸ்கட் குளிர்பானம் வழங்க வந்த கடற்படையினருக்கு பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன்போது “எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்” என கடற்படை அதிகாரியை பார்த்து காணி உரிமையாளர் பேசியுள்ளார்.போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.