ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரல் தற்போதைக்கு முடிவடையாத நிலையுள்ளதால், வடக்கு கிழக்கு பகுதிகளை போராட்ட களமாக மாற்றி தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடு்க்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மண்டைதீவில், காணி சுவீகரிப்பிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
அரசாங்கம் திட்டத்தை தீட்டி தங்களுடைய நிகழ்ச்சி நிரலை ஒப்பேற்றிக் கொண்டு செல்கின்றார்கள். அதிலும் தற்போது பிடித்து வைத்திக்கும் காணிகள் யாவும் வளம் நிறைந்த காணிகள்.
குறிப்பாக பொன்னாலை மக்கள் குடிநீருக்காக பவுசர் மூலம் நீரை பெறுகையில் குடிதண்ணீர்க் கிணற்றை கடற்படை கையகப்படுத்தி வைத்துள்ளனர்.
எங்கெங்கு புதைகுழிகள் உள்ளதோ அந்த இடங்களை அடையாளப்படுத்தி தங்களுடைய புத்த கோயிலைக் கட்டுகின்றனர். இவை பற்றிய தகவல்கள் முற்கூட்டியே தெரிந்தும், அரசாங்கத்தில் வேலை செய்யும் தமிழ் அதிகாரிகளும் கையறு நிலையிலுள்ளனர்.
இன்றும் தமிழ்ப் புலனாய்வாளர்கள் இங்குள்ளனர். அவர்களுக்கு நன்கு சிங்களம் தெரியும். ஆகவே இவை பற்றி அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் கூற வேண்டும். வேறு நாடுகளிலெல்லாம் இவ்வாறான நிலைமைகள் இருந்தாலும் இங்கு எதிர்த்துக் கதைத்தால் வேலை பறிபோகும் நிலையுள்ளது.
சரத் வீரசேகர நீதித் துறையை தூக்கி எறிகின்றார். தமிழர்களின் பொருளதாரத்தை வளர்க்கும் விடயங்களை இல்லாமல் செய்யும் நிகழ்ச்சி நிரலே காணப்படுகின்றது.
அதுவும் வடக்கு கிழக்கில் சாதுரியமாக நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளனர். நாங்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தாது விடின் தங்கள் நடவடிக்கைகளை சாதுரியமாக முன்னெடுப்பார்கள்.
வருகின்ற கிழமை கனேடியத் தூதுவர் இங்கு வரும் பொழுது அவர்களுக்கு இவ் இடங்களை காண்பிக்கும் தருணமே இவை. சர்வதேச ரீதியாக எடுத்து செல்ல வழிகாட்டும்.
எனவே ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரல் தற்போதைக்கு முடிவடையாத நிலையுள்ளதால், வடக்கு கிழக்கு பகுதிகள் போராட்ட களமாக மாற்றப்பட்டு தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடு்க்க வேண்டும் என்றார்.