
கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது, சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் மற்றும் அவர்களின் மேற்பார்வையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் அவரது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்த போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இப்பொழுதும் மன்னார் புதைகுழி மறைக்கப்பட்ட ஒன்றாக வந்துள்ள நிலையில் கொக்குத் தொடுவாய் புதைகுழி விடயம் கூட ஊடகம் ஊடாகவே பல மக்களின் காதுகளை சென்றடைந்துள்ளது.
இந்த கொக்குத் தொடுவாய் புதைகுழியானது, சர்வதேச நியமத்தின் அடைப்படையில் அதாவது அனுசரனையாளர்களின் மேற்பார்வையில் தோண்டப்படுத்தல் வேண்டும்.
ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோரை அவர்களது உறவுகள் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
இலங்கையை பொறுத்த மட்டில் இந்த ஆய்வுகளின் களப்பணிக்குரிய அறிவும், ஆற்றலும் எந்தளவிற்கு சர்வதேச நியமத்திற்கு உட்பட்டுள்ளது என்ற கேள்வியுள்ளது?
ஆகவே, சர்வதேசத்தின் கண்காணிப்பில் அவர்களின் மேற்பார்வையில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.