வடக்கு கிழக்கில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மனித உரிமைகள் பாதுகாவலராக பயணிக்கும் பாதை அவ்வளவு இலகுவான பாதை அல்ல என சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் இயக்குனர் அம்பிகா சிறிதரன் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ளதனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற, சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையத்தில் மனித உரிமைகள் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மனித உரிமைகள் தொடர்பில் அறிந்து கொண்ட மாணவர்களாகிய நீங்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாலளராக பயணிப்பதற்கு தயாராக வேண்டும்.
நீங்கள் கற்ற கல்வியை கொண்டு சமூகத்தில் மீறப்படும் மனித உரிமைகள் தொடர்பில் குரல் கொடுப்பதற்கும் அவற்றுக்கான தீர்வுகளை முன் வைப்பதற்கு நீங்கள் கற்ற கல்வி வழிகாட்டியாக இருக்கும்.
எமது நாடு குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் மக்கள் ஏதோ ஒரு வடிவில் அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழ் பேசும் பகுதிகளில் மனித உரிமைகள் செயற்பாட்டாளராக அல்லது பாதுகாவலராக செயல்படும் போது பல்வேறுபட்ட இடையூறுகள் ஏற்படுத்தப்படும்.
மனித உரிமை பாதுகாவலராக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பயணிக்கும் பாதை அவ்வளவு இலகுவான பாதையாக இருக்காது.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக பலர் செயற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் சான்றிதழை பெற்ற மாணவர்கள் சான்றிதலுடன் மட்டும் நின்று விடாமல் சமூகத்துக்கு உங்கள் அர்ப்பணிப்பான சேவையை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேலு கனகராஜ், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளா தேவி, அருட்தந்தை டொனால்ட் சுஜீவன் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் றுக்கி பெர்ணன்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.