ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சி , சூழ்ச்சிகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இது வெட்கக் கேடான விடயமாகும். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் , ஜனாதிபதி , பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்துரையாடி அதனை எதிர்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் வரிசைகளில் காத்திருந்து , சில சந்தர்ப்பங்களில் உயிரைக் கூட இழக்க வேண்டிய நிலைமையிலேயே கடந்த ஆண்டு நாடு காணப்பட்டது.
அந்த சந்தர்ப்பத்தில் நாட்டைப் பொறுப்பேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை எதிர்தரப்பினர் எவரும் ஏற்கவில்லை. எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனித்து அந்த சவாலை ஏற்று , இன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
இதனை சகித்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சி இன்று நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறது.
அதற்காகவே ஏனைய எதிர்க்கட்சிகளுக்கும் , அரச உத்தியோகத்தர்களுக்கும் , தொழிற்சங்ககத்தினருக்கும் அழைப்பு விடுகின்றது.
இது வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். எவ்வாறான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது. அதற்கு நாம் இடமளிக்கவும் மாட்டோம்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஏனைய 8 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு ஆதரவளித்தமைக்கான காரணத்தைக் கூட என்னிடம் கேட்காமல் என்னை கட்சியிலிருந்து நீக்கினர். அது மிகவும் தவறாகும்.
எனவே மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டாலும் , எனக்கு சு.க.வுடன் இணைந்து பயணிக்கும் எண்ணம் இல்லை. இனிவரும் எந்தவொரு தேர்தலிலும் பொதுஜன பெரமுன சார்பிலேயே போட்டியிடுவேன் என்றார்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் , அது தொடர்பில் சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டால் ஜனாதிபதி , பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்துரையாடி அதனை எதிர்கொள்வோம் என்றார்.