சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்தமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட எழுவர் அடங்கிய குழு தொடர்பான விபரங்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் தேதுனு டயஸ் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பேராசிரியர்களான சந்திம ஜீவந்த மற்றும் பிரியதர்ஷினி கலப்பத்தி உள்ளிட்டோரும் அதில் அங்கம் வகிக்கின்றனர்.
நாட்டில் கடந்த சில நாட்களாக, தடுப்பூசி செலுத்தப்பட்டமையை அடுத்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதன்படி, பண்டுவஸ்நுவர பகுதியில் சிறுமி ஒருவரும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவரும் இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்தமைக்கு அவருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியே காரணம் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளுக்குச் சென்று இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை 3 வாரங்களில் முன்வைக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.