உயிர்த்தெழும் பூமி வேளாண்மை விவசாய பயிற்சிப் பட்டறை – விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

ஆளவாழ்தல் அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையுடன் உயிர்த்தெழும் பூமி வேளாண்மை என்னும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் திருநெல்வேலியில்  புதன்கிழமை 19.07.2023 இயற்கை விவசாயம் தொடர்பிலான பயிற்சிப் பட்டறை ஆரம்பமாகி இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக இயற்கை விவசாய செய்முறைகளும் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன.

 வடமாகாண பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீ ரங்கன்  தலைமையில் இடம்பெற்று வரும் இருநாள் தொழில்நுட்ப பயிற்சிப்பட்டறைக்கு வளவாளராக இந்திய விவசாய ஆர்வலரும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நேரடியாக விவசாயம் தொடர்பான களவிஜயம் மேற்கொண்டதுடன் பல சர்வதேச பல்கலைகழகங்களில் சூழல்நேயமான நிலைபேறான விவசாய செயற்பாடுகள் தொடர்பான கருத்தரங்குகளை மேற்கொண்டு வருபவருமான திருமதி மாரிமுத்து ரேவதி அம்மையார் அவர்கள் பங்கேற்று செயன்முறையுடன் கூடிய பயிற்சியினை வழங்கினார்

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் கலந்து கொண்டார்.

இப்பயிற்சி பட்டறையில் மண்ணைப் புதுப்பித்தல், நீர் முகாமைத்துவம், வினைத்திறனான சக்திப் பயன்பாடு, பயிர் முகாமைத்துவம், அறுவடையும் அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்பங்கள், சந்தை முகாமைத்துவம் என பல கோணங்களில் கூறப்பட்ட புத்துயிர்ப்பூட்டும் விவசாயக் கருத்துகளை விவசாய ஆர்வலர்கள் ஆர்வமுடன் கேட்டறிந்தனர். இத்தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறையில் விவசாயிகள் மற்றும் விவசாய ஆர்வலர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews