யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை துறைமுக கடற்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தவர் மாத்தறையை சேர்ந்தவர் என அவரது குடும்பத்தினரால் இன்று (19) அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
பருத்தித்துறை துறைமுக இறங்கு தளத்தையொட்டியதாக ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்று முன்தினம் (17) அதிகாலை காணப்பட்டிருந்தது.
இது தொடர்பில் தகவல் கிடைத்ததை அடுத்து பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கிரிசாந் பொன்னுத்துரை சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்துது.
சம்பவம் தொடர்பில் பருதித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை (19) காலை உறவினர்கள் வருகைதந்து குறித்த சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டிருந்தவர் மாத்தறையைச் சேர்ந்த சுஜீவ அபயவர்த்தன விக்கிரமசிங்க (வயது-55) என்பவர் என அடையாளம் காட்டினர்.
குறித்த மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டார்.