33 ஆயிரம் சம்பள உயர்வு கோரி விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் காலை நேற்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே விமான நிலைய ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துவருவதாக விடயத்திற்கு பொருப்பான சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்பில் விமான நிலையங்களுக்கிடையிலான நிறுவன ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், முற்போக்கு ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் ஐக்கிய ஊழியர் சங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 3,000 உறுப்பினர்கள் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

அனைத்து சம்பள நிலைகளிலும் உள்ள விமான நிலைய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 33,000 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், இரத்மலானை மற்றும் ஏனைய விமான நிலையங்களில் கடமையாற்றும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிறுவன ஊழியர்களும் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலைய ஊழியர்களுக்கு கடைசியாக 2018 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், சேவை அரசியலமைப்பின் படி, விமான நிலைய ஊழியர்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், போராட்டம் காரணமாக விமான சேவைகளுக்கோ அல்லது விமான நிலையத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews