கோட்டாபய இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட 17.85 மில்லியன் ரூபா பற்றி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோட்டாவிடம் வாக்குமூலம் பெற ஏற்பாடு!

2022 ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து 17.85 மில்லியன் ரூபா கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து ஜூலை 27 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்ய எதிர்பார்ப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.சிட்டிசன் பவர் அமைப்பு செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இந்த தொகை தொடர்பில் இலஞ்ச சட்டத்தின் கீழ் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிய நீதிமன்றில் ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​குறித்த பணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய வர்த்தகர்களால் வழங்கப்பட்டதாகவும், போராட்டக்காரர்களால் அழிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு பணத்தை பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் வளாகத்தை கைப்பற்றியதன் பின்னர் நிதி அறிக்கை தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதால் பணத்தை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிட முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவித்திருந்தார்.இதேவேளை, பணமோசடிச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய அந்த விசாரணைகளின் பகுதிகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews