யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, பொருட்களை திருடி செல்வதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வலி. வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உள்ள பிரதேசங்களில் சில பகுதிகளை இராணுவத்தினர் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் நோக்குடன், அந்த காணிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதி மற்றும் தெல்லிப்பழை தென்மயிலை பகுதி ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
அவ்வாறு இராணுவத்தினர் வெளியேறி உள்ள போதிலும் அவை உயர் பாதுகாப்பு வலயமாகவே தற்போதும் உள்ளது.
குறித்த பகுதிகளை மாவட்ட செயலரிடம் உத்தியோகபூர்வமாக தாம் கையளித்த பின்னரே காணி உரிமையாளர் காணிக்குள் பிரவேசிக்க முடியும் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமது காணிக்குள் வெளியாட்கள் சிலர் நடமாடுவது தொடர்பில் அறிந்து காணிக்கு சென்ற போது, உயர் பாதுகாப்பு வலய வேலிக்கு உள்ளே வாகனங்களுடன் நடமாடும் திருடர்கள் திருட்டுக்களில் ஈடுபடுவதனை அவதானித்துள்ளனர்.
அது தொடர்பில், கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோருக்கு அறிவித்த போது, குறித்த பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதி, அப்பகுதிகளை இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னரே தாம் அப்பகுதிக்குள் செல்ல முடியும்.
அது வரையில் அவை உயர் பாதுகாப்பு வலயமே என தெரிவித்துள்ளனர் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.