மலையகக்கல்விக்கு அடித்தளமிட்டவர்கள் வடக்கு – கிழக்கு ஆசிரியர்களே…! சி.அ.யோதிலிங்கம்

வடக்கு, கிழக்கில் செயற்பட்ட தமிழ்த்தேசியக் கட்சிகளினதும், விடுதலை இயக்கங்களினதும் மலையக மக்கள் தொடர்பான அரசியல் நிலைப்பாடுகளிலும்; அது தொடர்பான செயற்பாடுகளிலும் பலத்த விமர்சனங்கள் இருக்கின்றன. சமூக ஆய்வாளர் நிலாந்தன் மலையக மக்கள் சந்திக்கும் நெருக்கடிகள் தொடர்பாக நான்கு தரப்புகள் பொறுப்புக் கூற வேண்டும் என்கின்றார். பிரித்தானிய அரசு, இந்திய அரசு, இலங்கை அரசு, வடக்கு – கிழக்குத் தமிழ்த்தரப்பு என்பவையே அந்த நான்குமாகும். பிரஜாவுரிமைச்சட்டத்iயும் வாக்குரிமைச்சட்டத்தையும் நிலாந்தன் முதலாவது இனஅழிப்பு என்கின்றார். இந்த இன அழிப்புக்கெதிராக இலங்கை இந்தியர்; காங்கிரஸ் 50களின் ஆரம்பத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடாத்தியது. இப் போராட்டத்திற்கு வடக்கு-கிழக்கு தமிழ்த்தரப்பும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தால் பேரெழுச்சியாக மாற்றியிருக்கலாம். தமிழ்நாட்டையும் உலகத்தமிழர்களையும் இதில் பங்குபற்றச் செய்திருக்கலாம். இவ் ஒத்துழைப்புக்கள் பெரிதாகக் கிடைக்காததினால் ஒருசில நாட்களிலேயே போராட்டம் முடங்கிப் போனது. தமிழ்த்தரப்பு தார்மீக ஆதரவுடன் மட்டும் நிறுத்திக் கொண்டது.

தமிழ்க்கட்சிகளில் தமிழ்க்காங்கிரஸ் கட்சி மலையக மக்கள் தொடர்பாக பெரிய அக்கறையைக் காட்டவில்லை. தமிழரசுக்கட்சிதான் அக்கறை காட்டியது. கட்சி தொடங்கிய ஆரம்ப காலங்களில் மலையக தொழிற்சங்க அரசியலில் அனுபவம் பெற்ற தெ.செ.வைத்தீஸ்வரன் நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தினார்.  எனினும் தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி உருவாகும் வரை கட்சி பெரிய போராட்ட சக்தியாக மாறவில்லை. 1953 ம் ஆண்டு தை மாதம் பொங்கல் தினத்தன்று தமிழரசு வாலிப முன்னணி உருவாக்கப்பட்டது கொக்குவிலைச்  சேர்ந்த ந.அருணாசலம் இதன் உருவாக்கத்தில் முன்னணியில் நின்றார். தமிழரசு வாலிப முன்னணியின் தலைவராக அ.அமிர்தலிங்கம் தெரிவுசெய்யப்பட்டார். இதன் தோற்றத்திற்கு பின்னரே போராட்டங்கள் முனைப்பு பெறத் தொடங்கின. எனவே தமிழரசுக்கட்சி சத்தியாக்கிரகம் தொடர்பாக போராட்டங்களை முன்னெடுக்காமை புரிந்து கொள்ளக் கூடியதே!

1962 ம் ஆண்டு மன்னாரில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் மலையகத்திற்கான கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகம் உருவாக்கப்பட்டது. இத்தொழிற்சங்க உருவாக்கம் தொடர்பாகவும் கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதன் நீட்சியாகத்தான் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் ஈழப்புரட்சி அமைப்பும் மலையகத்தையும் இணைத்த  ஈழத்தை பிரகடனப்படுத்தியிருக்கலாம். வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் மலையக தமிழ் மக்களும் இனத்தால், மொழியால் ஒன்றுபட்டாலும் அரசியல் அடையாளத்தால்வேறுபட்டவர்கள். வடக்குக் கிழக்கத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்குள் மலையக மக்களை உள்ளடக்க முடியாது. வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் தனி நாடு வரை செல்லலாம் ஆனால் மலையக மக்கள் அவ்;வாறு செல்ல முடியாது. ஒரு உச்ச வரையான அதிகாரப் பங்கு தான் அவர்களது எல்லை. தவிர அவர்கள் சுற்றிவளைப்புக்குள்ளான பிரதேசத்தில் வாழ்பவர்கள.; வடக்கு – கிழக்குக் கோரிக்கைக்குள் அவர்களையும் உள்ளடக்குவது அவர்களுக்கு பாரிய ஆபத்துக்களையும் கொண்டு வரும். எனவே வடக்கு – கிழக்குச்சக்திகள் மலையக சக்திகளுடன் ஐக்கிய முன்னணி அமைத்துச் செயற்பட வேண்டுமே தவிர தங்களுடைய அரசியலை அங்கு மேற்கொள்ளக்கூடாது.

மலையக மக்களை  வடக்கு – கிழக்கில் குடியேற்றலாம் என ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. மலையகத்திலுள்ள அனைவரையும் வடக்கு- கிழக்கில் குடியேற்றுவது என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று. மலையக மக்களும் அதனை விரும்பப் போவதில்லை. மலையகம் மலையக மக்களினால் உருவாக்கப்பட்டது. நுவரெலியா மாவட்டத்தில் எண்ணிக்கை ரீதியாக அவர்களே முதல் நிலையில் உள்ளனர்.8 உள்;ராட்சிச் சபைகள் அவர்களது ஆளுகையில் உள்ளன. இவ்வாறு அவர்கள் உருவாக்கிய பிரதேசத்திலிருந்து வெளியே வாருங்கள் எனக் கூறுவது அற நெறிக்கும் ஏற்றதல்ல. இன்றும் கூட வடக்கு – கிழக்கில் வாழ்பவர்களில் பலர் ஒரே அரசியல் அடையாளத்துக்குள் இரு தரப்பையும் பார்க்க முற்;படுகின்றனர். இது கவலைக்குரியதாகும்.
1967ஆம் ஆண்டு சிறீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தை அமுல்படுத்தவதற்காக சிறீமா- சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இவ் ஒப்பந்தத்தின் கீழ் பிரஜாஉரிமை பெற்றவர்களை தனியான இடாப்பில் பதிவுப்பிரஜை என்ற பெயரில் இச்சட்டம் பதிவு செய்தது. இது இரண்டாம் தரப்பினர்களாக மலையக மக்களை கருதுகின்ற ஒரு விடயமாகும். ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்குகின்றது என்பதற்காக தொண்;டமானைத் தலைவராகாக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இதனை ஆதரித்தது. இது ஆதரிக்கிறது என்பதற்காக தமிழரசுக்கட்சியும் இதனை ஆதரித்தது. இவ்விரு தரப்புகளும் ஆட்சியின் பங்காளிகளாக இருந்தமையும் ஆதரவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மலையக மக்களிலிருந்து இந்த ஆதரவுச் செயற்பாட்டுக்கு பெரிய எதிப்புகள் வராவிட்டாலும் வடக்கு-கிழக்கு தமிழ்த் தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் கிழம்பின. தமிழரசுக்கட்சியிலிருந்து வி.நவரத்தினம் பிரிந்து தமிழர் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கினார். இந்த ஆதரவு தொடர்பாகவும் தமிழரசுக் கட்சி மீது விமர்சனம் உள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரிக்கிறது என்பதற்காக ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. இது பற்றி முன்னரும் கூறப்பட்டுள்ளது.

இதே போல் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஈரோஸ் இயக்கங்களின் மலையகத்தையும் இனைத்த ஈழமும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டை முன்வைக்கும் போதும் அது சார்ந்த மக்களின் சம்மதம் அவசியம். அச்சம்மதத்தைப் பெற்றுக் கொள்வதில் இவ்விரு இயக்கங்களும் பெரிய அக்கறையைக் காட்டவில்லை.

புளொட் இயக்கம் வடக்கு- கிழக்கிற்கு அகதிகளாக வந்த மலையக மக்களை வன்னிப் பிரதேசத்திலும் கிழக்கிலும் குடியேற்றுவதில் அதிக அக்கறை செலுத்தியது. புளொட் இயக்கத்தின் அங்கத்தவர்களைக் கொண்ட “ காந்தியம்” அமைப்பு இதில் தீவிர அக்கறையைக் காட்டியது.  “ காந்தியம்” அமைப்பின் செயலாளர் மருத்துவர் ராஜசுந்தரமும் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த சந்ததியாரும் இதற்காக கடுமையாக உழைத்தனர். சென்ற வாரக்கட்டுரையிலும் இது பற்றிக்கூறப்பட்டுள்ளது. ஆனாலும் மலையக மக்கள் ஆபத்துக்கள் நிறைந்த எல்லைப்பிரதேசங்களில் குடியேற்றப்பட்டனர் என மலையக கல்வியாளர்களால் விமர்சிக்கப்பட்டது. இவற்றிலும் உண்மைகள் இருக்கின்றன. போர்க்காலங்களில் இங்கு குடியேறியவர்கள் மீண்டும் அகதிகளாக்கப்பட்டனர். அவர்களுள் ஒரு பகுதியினர் தமிழ் நாட்டின் அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னோர் பகுதியினர் வன்னியின் உட் பிரதேசங்களில் குடியேறினர். கிளிநொச்சி மாவட்டத்தில் குடியேறிய மக்களுக்கு இந்த நிலை ஏற்படவில்லை. போர்க்காலங்களில் இடப்; பெயர்வுக்குள்ளான போதும் மீண்டும் அவர்கள் தமது சொந்த இடத்துக்குத் திரும்பினர்.
தமிழ் அரசியல் சக்திகளை விட மலையக மக்கள் தொடர்பாக வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புக்களும் ஆசிரியர்களும் அதிக அக்கறை கொண்டிருந்தனர். கிறிஸ்தவ நிறுவனமான “ மனித முன்னேற்ற நடுநிலையம்” 1977 ஆம் ஆண்டில் கலவரத்தில் அகதிகளான மலையக மக்களை குடியேற்றுவதில் வலுவான அக்கறையைக் காட்டியது. அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர்; அதில் அதிக அக்கறையைக் காட்டினாh.; ஆன்மீக தலைவர்;களில் ஒருவரான ஆத்;ம ஜோதி முத்தையா நாவலப்பிட்டியில் ஆத்;ம ஜோதி நிலயத்தை உருவாக்கி மலையக மக்கள் மத்தியில் ஆன்மீகப் பணியினையும் கல்விப்பணிகளையும் மேற்கொண்டார். நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியில் அவர் அதிபராக இருந்தமையும் அவருக்கு வாய்ப்புக்களைக் கொடுத்தது. ஆத்மஜோதி என்கின்ற ஆன்மீக சஞ்சிகையையும் மாதா மாதம் வெளியிட்டார். அருட்தந்தை கீதபொன்கலன் பண்டாரவளையில் தனது ஆத்மீக நிலையத்தை உருவாக்கி கல்விப்பணிகளினதும் மலையக மக்களின் பிரச்சினைகளை வெளியே கொண்டு வருவதிலும் பாரிய பங்காற்றினார். மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அவர் எழுதிய நூல்கள் இன்றும் பிரசித்தமாக உள்ளது.

சமூக விஞ்ஞான ஆய்வு மையம் மலையக சமூக ஆய்வு மையத்துடன் இணைத்து பல பணிகளைச் செய்து வருகின்றது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது. மலையக நாட்டார் பாடல் பாடகர் விமலநாதன் யாழ்ப்பாணம் அழைத்து “மலையக நாட்டார் பாடல் காவலன்” என்ற விருதையும் வழங்கியுள்ளது. “மலையக வரலாறு” மு.சி.கந்தையாவின் நூலும் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.

மலையக கல்வி விடயத்தில் தமிழரசுக்கட்சியும் விசேட கவனம் செலுத்தியது. 50 களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய கல்லூரிகளில் மலையக மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு இலவசமாக விடுதி வசதிகள் வழங்கப்பட்டதோடு, புத்தகங்கள் கற்றல் சாதனங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. மலையக மாணவர்களைச் சேர்ப்பதில் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி முன்னணியில் நின்றது கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கு.வன்னியசிங்கம் அச்செயற்திட்டத்ததை தலைமையேற்று நடாத்தினார்.
மலையகத்தில் கல்வியை வளர்த்ததில் அங்கு கற்பித்த வடக்கு – கிழக்கு ஆசிரியர்;களின் பங்கு மகத்தானது. மலையக கல்விக்கு அடித்தளமாக இருந்தவர்கள் அவர்கள் தான.; மலையக ஆசிரியர்கள் உருவாகும் வரை மலையக கல்வியைப் பாதுகாத்தவர்கள் இவர்கள் தான். இன்றும் கூட கணித விஞ்ஞானத்துறைகளில் இவர்களின் பங்கு கணிசமாக உள்ளது. ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கணித ஆசிரியராக இருந்த ஜீவராசா அங்கு பல பொறியியலாளர்கள் உருவாகுவதற்கு காரணமாக இருந்தார். அவரது பணியின் முக்கியத்துவத்தை அவரது மரணச்சடங்கில் கலந்து கொண்ட மாணவர் திரள் வெளிக்காட்டியது. ஒரு அரசியல்வாதிக்கு கூட வழங்காத கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டது. அவரது பெயரில் கல்லூரியில் ஒரு மண்டபம் கட்டப்பட்டதாகவும் அறியக் கிடக்கின்றது.

இலக்கியத்துறையிலும் பலர் பங்காற்றியுள்ளனர். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா மல்லிகை இதழ் மூலம் பல எழுத்தாளர்களை மலையகத்தில் உருவாக்கினார். பல வடக்கு – கிழக்கு எழுத்தாளர்கள் மலையகப்பிரச்சினைகளை தமது படைப்புக்களில் கொண்டு வந்தனர். எழுத்தாளர்.தி.ஞானசேகரன் இதில் முக்கியமானவா.; அவரது “குருதிமலை” நாவல் மலையக மக்களின் நிலப்போராட்டத்தை வெளியில் கொண்டு வந்தது. மலையக நிலப்பிரச்சினையை வெளியே கொண்டு வந்த முதல் நாவல் இதுவென்றே கூறலாம். நிலப்பறிப்பு என்பது தேசிய இன ஒடுக்கு முறையின் அடையாளம். தி.ஞானசேகரன் இந்நாவல் மூலம் மலையகத்தின் தேசிய இன ஒடுக்கு முறையை வெளிக்கொண்டு வந்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டு வருகின்ற “ஞானம்” சஞ்சிகை மலையக எழுத்தாளர்களுக்கு வலுவான களத்தை கொடுப்பதோடு மலையகப் பிரச்சினைகளையும் வெளிக் கொண்டு வருகின்றது.
இந்த வாரம் பார்ப்பதாக இருந்த வடக்கு – கிழக்கு தொடர்பாக மலையகத்தின் அக்கறையை அடுத்த வாரம் பார்ப்போம்

Recommended For You

About the Author: Editor Elukainews