
நேற்றையதினம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்து வீட்டுப்பணி புரிந்து வந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த சிறுமி நான்கு மாதங்களுக்கு முன்னர் சம்பவம் நடந்த வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இதன்போது அவருக்கு மாதாந்த சம்பளமாக 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் அவருக்கு 4 மாதங்களுக்கும் மாதாந்தம் ஐயாயிரம் ரூபாவே வழங்கப்பட்டது. மிகுதி 80 ஆயிரம் ரூபா வழங்க வேண்டி உள்ளது.
இந்நிலையில் பெற்றார் மற்றும் உறவினர்களுடன் பேசுவதற்கு மாதத்தில் ஒரு தடவையே குறித்த சிறுமிக்கு தொலைபேசி வழங்கப்படும்.
சிறுமிக்கு வீட்டுக்கு செல்ல முயற்சிக்கும் வேளை, பெற்றோர் அவரை வீட்டுக்கு வரவேண்டாம் என கூறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பல துன்பங்களை எதிர்கொண்டு வந்த சிறுமி நேற்று பிற்பகல் வேளை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார், சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சிறுமியின் மரணம் கொலையாக இருக்கும் என பெற்றோர் சந்தேகப்படுவதால் உடற்கூற்று பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை – முதலியார் கோவில் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சர்மிகா (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.