இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, மீன்பிடித் தொழிலை மேம்படுத்தத் தேவையான ஜப்பானிய தொழில்நுட்பத்தை வழங்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக, எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கிராமத்தில் உள்ள திறமையான மாணவர்களுக்கும் தொழில்நுட்ப வசதிகளை வழங்க ஒத்துழைப்பு வழங்குமாறும், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் சஜித் பிரேமதாச கோரிக்கை முன்வைத்துள்ளார்.
மேலும் வீழ்ந்துள்ள நாட்டை மீட்பதற்குத் தேவையான வழங்க முடியுமான சகலவிதமான ஒத்துழைப்பையும் இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், குறித்த ஒத்துழைப்புகளின் பயன்பாடு மற்றும் செயல்திறனைக் கண்காணிக்க பங்களிக்குமாறும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இச்சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்று ரீதியாக நிலவிவரும் நட்புறவு ரீதியிலான இராஜதந்திர உறவுகள் தொடர்பிலும் இருவரும் கவனம் செலுத்தினர்.