
யாழ்ப்பாணம் – குருநகர் சிறகுவலை தொழிலாளர் சங்கம் மற்றும் பாஷையூர் கடற்றொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்றையதினம் (29) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர்.
கிளிநொச்சி, கௌதாரிமுனை பகுதியில் குருநகர் மற்றும் பாஷையூர் கடற்றொழிலாளர்களினால் அனுமதி இன்றி மேற்கொள்ளப்பட்டு வந்த சிறகு வலைத் தொழிலுக்கு எதிராக கிளிநொச்சி கடற்றொழில் திணைக்களத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கெளதாரிமுனை கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக கடற்றொழில் திணைக்களம் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்த குருநகர், பாஷையூர் கடற்றொழிலாளர்கள், பாரம்பரியமாக தாங்கள் தொழில் மேற்கொண்டு வந்த பிரதேசங்களில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுமாயின், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை இழக்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி எந்தத் தரப்பினரும் பாதிக்காத வகையில் சுமூகமான தீர்வினை காண்பதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.