
காரைநகர் – ஆலடி சந்தியில், பிரதேச சபையின் அனுமதியின்றி சட்டவிரோத மீன் சந்தைக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படுவதாக 30.07.2023 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும் பிரதேச சபை செயலாளருக்கும், முன்னாள் பிரதேச சபைத்தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனால் முறைப்பாடு செய்யப்பட்டது. 

இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையால் குறித்த பகுதிக்கு முன்னாள் தவிசாளர் 31.07.2023 காலை சென்றபோது அவர் மீது தாக்குதல் முயற்சி ஒன்று செல்வராசா யோகநாதன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இது சம்பந்தமாக வட மாகாண பிரதம செயலாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பிரதம செயலாளர் உத்தரவிட்டதுடன் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரதேச சபை செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடத்தை இடித்தகற்றுவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் தவிசாளரிடம் பிரதம செயலாளர் உறுதியளித்தார்.
கடந்த ஜனவரி மாதத்தில் மக்கள் நலன் கருதி சபைநிதி மூலம் சக்கலாவோடையில் நவீன முறையில் மீன் சந்தை அமைக்கப்பட்டும் இதுவரை ஒருசில வர்த்தகர்களின் தூண்டுதலால் மீன் வியாபாரிகள் புதிய மீன் சந்தைக்கட்டடத்திற்கு வருவதைத்தவிர்த்து வருகிறார்கள் எனவும் பிரதம செயலாளருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.