
சுழிபுரம் – பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரம் சங்கமித்தையால் கொண்டு வந்து நாட்டப்பட்டது என சித்தரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதனால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்கள் பாததைகளை ஏந்தியவாறு “சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை, பொய்யான வர்த்தமானியை இரத்துச் செய், இந்த மண் எங்களின் சொந்த மண், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், பறாளாய் முருகன் தமிழர் சொத்து, தாயகத்தில் ஆக்கிரமிப்பு சர்வகட்சி கூட்டத்தில் நல்லகணக்க நாடகம், இராணுவமே வெளியேறு” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
