அடுத்த வாரம் நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை கொழும்பிலிருந்து புறப்பட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
அதேவேளை, அது தொடர்பில் முன்வைக்கப்படும் தவறான கருத்துக்களைச் சரி செய்வது தொடர்பிலும் அவர் கவனம் செலுத்துவார் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் குறிப்பிட்டார். கோவிட் வைரஸ் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது, பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூகரீதியான வீழ்ச்சியை சரி செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் உரையின்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகத்தை தனித்தனியே சந்திப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவருடன் முக்கிய பல விடயங்களை உள்ளடக்கிய பேச்சை முன்னெடுப்பார்.
அத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி, அந்த தலைவர்களுடன் முக்கியமான பேச்சுகளை முன்னெடுப்பார் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையம் ஏற்பாடு செய்திருந்த வாராந்த செய்தியாளர் மாநாடு சூம் தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றது. அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.