வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய வரலாற்றிலேயே பெருந்தொகை கஞ்சாவை கடத்தலை முறியடித்து பெரும் குற்றச் செயல் ஒன்றைத் தடுத்து நிறுத்தியவர்கள் பொன்னாலை இளைஞர்கள் என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத் பண்டார தெரிவித்தார்.
இதற்காக பொன்னாலை இளைஞர்களையும் பொதுமக்களையும் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி பாராட்டியுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
பொன்னாலையில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொன்னாலையில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட பொதுக் கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் பொன்னாலை மேற்கு ஸ்ரீகண்ணன் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
இதில் கிராம சேவையாளர் ந.சிவரூபன், சமூக செயற்பாட்டாளர் ந.பொன்ராசா மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இளைஞர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத் பண்டார, இலங்கையில் கஞ்சா, ஹெரோயின் என்பன பாரியளவில் வியாபாரமாக நடைபெறுகின்றது. இதை பொலிஸாரால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. பொதுமக்களின் ஒத்துழைப்புடனேயே இதை முறியடிக்க முடியும்.
வட்டுக்கோட்டை பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரும் கஞ்சா கடத்தலை முறியடித்து நாட்டில் இடம்பெறவிருந்த பாரிய குற்றச்செயலைக் கட்டுப்படுத்த உதவியவர்கள் பொன்னாலை இளைஞர்கள். இதற்காக பொன்னாலை மக்களையும் இளைஞர்களையும் வட்டுக்கோட்டை பொறுப்பதிகாரி பாராட்டியிருக்கின்றார்.
இதேபோன்று, ஏனைய பிரதேச மக்களும் இளைஞர்களும் செயற்படுவார்களாயின் இயன்றவரை போதைப்பொருள் கடத்தலை முறியடித்து குற்றச்செயல்களைக் குறைக்க முடியும் – எனத் தெரிவித்தார்.