தாயகத்தைத் தளமாகக் கொண்ட ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’ வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.
‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனரும் கனடா வாழ் கவிஞருமான அனுரா வெனிஸ்லஸ் தனது நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் ஆகியோரோடு இணைந்து இந்த விருதுகள் வழங்கும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார்.
அறக்கட்டளை அமைப்பின் தலைவரும் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக் கழகப் பேராசிரியருமான கலாநிதி சிவலிங்கராஜா அவர்கள் தாயகத்திலிருந்து தனது தலைமை உரையையும் ◌வாழ்த்துச் செய்தியையும் இணைய வழியாக சமர்ப்பித்தார்.
உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து வரும் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆளுமைகள் இருபது பேர் இந்த விழாவில் கௌரவிக்கப்பெற்றனர்.
ஒவ்வொரு துறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்றவர்கள் என வெற்றியாளர்கள் அனைவரும் அங்கு கலந்து கொண்டனர்.
கனடாவிலிருந்து பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் இலக்கியத்துறை சார்ந்த பணிகளுக்கும், ‘கனடா உதயன்’ பத்திரிகையின் ஆசிரியரும், கவிஞரும், எழுத்தாளருமான ஆர்.என். லோகேந்திரலிங்கம் – ஊடகத்துறைக்காகவும், விருதுகள் தேர்வுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதே போன்று பரதநாட்டியம். நாடகம் . படைப்பிலக்கியம்,விளையாட்டு, நாட்டுக் கூத்து, வைத்தியச் சேவை. சமூகசேவை என பல துறைகள் சார்ந்த ஆளுமைகள் அங்கு மேடையில் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.
இங்கே காணப்படும் படங்களில் விருதுகள் பெற்றவர்கள் பலர் தங்கள் விருதுகளை பிரான்ஸ் தேசத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத்தலைவர்கள் என பலரால் கௌரவிக்கப்படுவதைக் காணலாம்.