விடுதலைக்காக மலையகத்தில் உண்ணாவிரதம் – சி.அ.யோதிலிங்கம்

தலைமன்னாரிலிருந்து  மாத்தளை வரை மலையகம் 200 எழுச்சி பாதை யாத்திரை நேற்று முன்தினம் மாத்தளையில் நிறைவுக்கு வந்துள்ளது. நிறைவு நாளில் இலங்கையின் அனைத்துப்பிரதேசங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். கணிசமானளவு சிங்கள மக்களும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். பௌத்த மத குருமாரும் பலர் கலந்து கொண்டனர். வடக்கு – கிழக்கில் இருந்தும் அதிகளவானோர் கலந்து கொண்டனர்.
இவ் எழுச்சி பாதை யாத்திரை வரலாற்றை புதிய தலைமுறைக்கு கடத்துவதில் பாரிய பங்களிப்பு செய்யும் எனக் கருதலாம். மக்களை விழிப்புடன் வைத்திருப்பதற்கும் மலையக மக்களின் கூட்டிருப்பை , கூட்டடையாளத்தை , கூட்டுரிமையை பேணுவதற்கும் இவ்வாறான நினைவு கூரல்கள் மிக மிக அவசியம்.
கடந்த வாரம் வடக்கு – கிழக்கு விவகாரத்தில் மலையக மக்களின் அக்கறை தமிழரசுக்கட்சி காலத்தில் எவ்வாறு இருந்தது எனப் பார்த்தோம். மலையக மக்கள் இரத்தத்தினால் தமது அக்கறையைக் காட்டினர் என்பதையும் பார்த்தோம் இந்த வாரம் இளைஞர் இயக்க அரசியலின் போதும் ஆயுத போராட்ட காலத்திலும் அக்கறை எவ்வாறு இருந்தது எனப்பார்ப்போம்.
1965 ம் ஆண்டு தமிழரசுக்கட்சி ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்துடன் கூட்டுச்சேர்ந்தது. மு.திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராக பதவியேற்றார். அரசாங்கத்திற்கு எதிராக தீவிரத்துடன் போராடிய தமிழரசு வாலிபமுன்னணியைச் சேர்ந்தவர்கள் தென்னிலங்கையிலிருந்து வரும்; அமைச்சர்களைவரவேற்பதில் இருந்து வரும் அமைச்சர்களை வரவேற்பதில் போட்டி போட்டுக்கொண்டு செயற்பட்டனர். இதனை சகித்துக் கொள்ளாத இளைஞர்கள் பலர் தமிழரசுக்கட்சியை விட்டு வெளியேறினர். அவர்கள் இரண்டு தீர்மானங்களுக்கு வந்தனர் ஒன்று சமஸ்டிக் கோரிக்கை சரிவராது தமிழீழமே தீர்வு இரண்டாவது தமிழரசுக்கட்சியை நம்பிப்பயனில்லை. கட்சி அரசியலுக்கப்பால் விடுதலை இயக்கம் ஒன்றை உருவாக்குதல்;.
இதற்கேற்ப 1968 ம் ஆண்டு ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம் என்ற கட்சிசாரா இளைஞர் அமைப்பு உருவாக்கப்பட்டது. இலங்கைத் தேசிய மன்னன், மைக்கல் தம்பிநாயகம் , பரமசாமி, வில்வராஜா, டொக்டர் சண்முகநாதன், முத்துக்குமாரசுவாமி, உரும்பிராய் சிவகுமாரன் , உரும்பிராய் மகா உத்தமன் போன்றோர் இவ் அமைப்பை உருவாக்குவதில் முன்னணியில் நின்றனர். “சியவச” சுவீப்ரிக்கற்றுக்கு எதிரான போராட்டம். திருகோணமலையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான போராட்டம் என்பவற்றை இவ்வமைப்பு முன்னின்று நடாத்தியது.
1970 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி குறிப்பாக விஞ்ஞான பீடங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் போது தமிழ் மொழி மூல மாணவர்கள் கூடுதலான புள்ளிகளும் சிங்களமொழி மாணவர்கள் குறைந்த புள்ளிகளும் பெறவேண்டும் என விதிக்கப்பட்டது. இந்தப்பாகுபாடு தமிழ் மாணவர்கள் மத்தியில் பாரிய அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இதனை எதிர்ப்பதற்காக தமிழ் மாணவர்கள் பேரவை என்ற அமைப்பு 1970 ம் ஆண்டு கார்த்திகையில் உருவாக்கப்பட்டது. ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இது இருந்தது எனலாம். உரும்பிராய் சிவகுமாரன், த.முத்துக்குமாரசுவாமி, சத்தியசீலன், அரியரத்தினம் ஆகியோர் இதனை அமைப்பதில் முன்னின்றனர். 1970 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 24 ம் திகதி தரப்படுத்தலுக்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் மாணவர் பேரவை நடாத்தியது. கொக்குவிலில் இருந்து ஆரம்பித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் யாழ் முற்றவெளியில் முடிவடைந்தது. அங்கு பொதுக்கூட்டமும் இடம் பெற்றது.
நாளடைவில் அரசியல் ரீதியான போராட்டத்தில் மாணவர் பேரவையினர் நம்பிக்கை இழந்து ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க தலைப்பட்டனர். ஆயுதப்போரட்டத்தை முதன்முதலில் தொடங்கி வைத்தது இவ் அமைப்புத்தான்.  பங்களாதேசின் “முக்;திபாகினி” இயக்கத்தை இவர்கள் முன்மாதிரியாக கொண்டனர். பஸ் எரிப்பு , தேசிய கொடி எரிப்பு என ஆரம்பித்த போராட்டம் அமைச்சர்களின் கார்களுக்கு குண்டு வீசுதல் அரசாங்க சார்பு முக்கியஸ்தர்களை சுடுதல்  என தொடர்ந்தன. கைக்குண்டுகளும் , காட்டுத்துவக்குகளும் இவர்களுடைய ஆயதங்களாக இருந்தன 1970 ம் ஆண்டு உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய நிகழ்வு ஒன்றிற்கு வருகை தந்த பிரதியமைச்சர் சோமவீரசந்திரசிறீயின் காருக்கு சிவகுமாரன் குண்டு வீசினான். இதே காலப்பகுதியில் கொழும்பில் தங்கியிருந்த வட்டுக்கோட்டை தொகுதிபாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மீது திசவீரசிங்கமும், ஜீவராசாவும் துப்பாக்கிச்சூட்டை நடாத்தினர்.
கல்வியங்காடு கொண்டலடி வைரவகோயில் மூலஸ்தானத்தில் இவர்கள் மறைவாக வைத்திருந்த ஆயுதங்கள் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து மாணவர் பேரவை முக்கியயஸ்தர்கள் கைது செய்யப்பட்டனர். நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வெளிப்படையாக செயற்படுவதற்கும் , கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்வதற்கும் ஒரு அரசியல் இயக்கம் தேவை எனக் கருதப்பட்டதால் 1973 ம் ஆண்டு தை மாதம் 28 ம் திகதி “தமிழ் இளைஞர் பேரவை” உருவாக்கப்பட்டது  இதன் தலைவராக மயிலிட்டி சி.புஸ்பராஜா தெரிவு செய்யப்பட்டார். செயற்குழு உறுப்பினர்களாக பிரான்சிஸ், வரதராஜபெருமாள் , பத்மநாபா, தவராசா, போல்பிள்ளை என்போர் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழ் இளைஞர் பேரவை , குடியரசு தினத்தை எதிர்த்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்ததை நடாத்துதல் , வடக்கு – கிழக்கிற்கு வரும் அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டுதல் என பல போராட்டங்களை நடாத்தியது. இக்காலத்தில் சிறையில் இருந்த தமிழ் மாணவர் பேரவையின் உறுப்பினர்கள் தங்களை விடுதலை செய்வதற்கான போராட்டங்களை நடாத்துமாறு தமிழ் இளைஞர் பேரவையை வேண்டினர்.
தமிழ் இளைஞர் பேரவை ஐம்பது நாள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தது. முதல் நாள் போராட்டம் 1973 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 11ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. தொடர்ந்து கிழக்கு மாகாணம், மலையகம் என்பவற்றிலும் இடம் பெற்றன மலையகத்தில் போராட்டங்களை நடத்துவதற்காக புஸ்பராஜாவும், பிரான்சிஸ்சும் மலையகத்திற்கு சென்றனர். முதலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் செல்லச்சாமியை கொழும்பில் சந்தித்து ஆலோசனை பெற்றனர். செல்லச்சாமி முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தார். மலையகத்தின் அரசியல் செயற்பாட்டாளரான கெங்கரத்தினம் மலையகத்தின் பல பகுதிகளுக்கும் இருவரையும் அழைத்துச் சென்று ஆர்வமுள்ள இளைஞர்களை அறிமுகப்படுத்தினார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் ஐயாத்துரையையும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடியபோது அவர்களும் ஒத்துழைப்பு தருவதாக குறிப்பிட்டனர். இலங்கை தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த யேசுதாஸ் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியதோடு அவரது மகனையும் அவர்களோடு சேர்த்து பணியாற்றுமாறு அனுப்பி வைத்தார்.
ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் , தலவாக்கலை கதிரேசன் ஆலயம் நாவலப்பிட்டி , டிக்கோயா ஆசிய இடங்களில் உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெற்றது. தலவாக்கலை கதிரேசன் கோயில் போராட்டம் பொலிசாரால் தாக்கப்பட்டது. தமிழ் இளைஞர் பேரவைத்தலைவர் சி.புஸ்பராஜா கடும் தாக்குதலுக்கு உள்ளாகினார். புஸ்பராஜா முதன் முதலில் படையினரால் தாக்கப்பட்டது இங்கு தான். பின்னர் அவர் பல தடவைகள் சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளானார். இளம் வயதில் அவர் மரணமடைவதற்கு இச்சித்திரவதைகளே காரணங்களாக இருந்தன. தலவாக்கலை உண்ணாவிரதப் போராட்டம் குழப்பப்பட்டது. ஏனைய இடங்களில் போராட்டம் பெரிய குழப்பத்திற்கு உள்ளாகவில்லை. மலையக மக்களும் ஆர்வத்தோடு போராட்டத்தில் பங்குபற்றினர். வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற போராட்டங்களிலும் மலையக மக்களில் பலர் கலந்து கொண்டனர். ஐம்பது நாள் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம் யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலில் இடம் பெற்றது. தமிழ் இளைஞர் பேரவையின் முக்கியஸ்தரும் முதலாவது வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சருமான அண்ணாமலைவரதராஜ பெருமாளும் மலையக வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஆயுதப்போராட்ட காலத்தில் ஈரோஸ் இயக்கத்தில் அதிகளவிலான மலையக இளைஞர்கள் இணைந்து கொண்டனர். ரூபவாகினி கோபுரத்தாக்குதல் தொடர்பாக மலையக இளைஞர்கள் 16 பெர் கைது செய்யப்பட்டனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
1991 ம் ஆண்டு கொழும்பு கூட்டுப்படைமுகாம்;தாக்குதல் சந்தேகநபர் வரதனுக்கு மலையக செயற்பாட்டாளர்கள் பாதுகாப்புக் கொடுத்தனர். கொட்டகலையில் பாதுகாப்பு கொடுத்து தலைமறைவாக வைத்திருந்தமைக்காக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனும் , செயலாளர் காதர் , உப தலைவர் தர்மலிங்கம் முக்கியஸ்தவர்களான ராஜாராம், ராமகிருஷ்ணன், மேரியம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேரியம்மா வரதனுக்கு பாதுகாப்பு கொடுத்தமைக்காக நான்கு வருடங்கள் வரை சிறைவாசம் அனுபவித்தார். தமிழீழப்போராட்டத்திற்காக மலையகத்திலிருந்து செயலாற்றி சிறைவாசம் அனுபவித்த முதல் பெண்மணி இவர் தான். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவர் மரணமாகியிருந்தார்
தமிழீழப் போராட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி சந்திரசேகரன் தான் இரு தடவைகள் அவர் சிறைவாசம் அனுபவித்தார். முதலில் வரதனுக்கு பாதுகாப்பு கொடுத்தமைக்காக சிறைவாசம் அனுபவித்தார்.  பின்னர் பண்டாரவளை பிந்தனுவ தடுப்பு முகாம் கொலைகளுக்கு எதிரான போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டார். 2001 ம் ஆண்டு பண்டாரவளை பிந்;தனுவெவ தடுப்பு முகாம் படுகொலை இடம் பெற்றது. தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர்கள் படையினராலும் ஊரவர்களினாலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள.; இதற்குள் மலையக இளைஞர்களும் அடங்குவர்.  சந்திரசேகரன் இக்கொலையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தலவாக்கலையில் நடாத்தினார். இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இக்கொலைக்கு எதிரான போராட்டத்தில் வட்டகொடை ரயில் நிலையத்தில் ரயிலை எரித்தார்கள் என குற்றம் சாட்டி மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதனை விட பல மலையக இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டனர். லோகா, ஜோர்ஜ் என்பவர்கள் இவர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் பற்றிய தகவல்கள் இன்னமும் வெளிவரவில்லை.
வடக்கு – கிழக்கில் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் குடியேறிய மலையக வம்சாவழியினர் பலர் ஆயுதப்போராட்டத்தில் இணைந்து மாவீரர்களாகி உள்ளனர். கப்;டன் பூங்குயில் மேஜர் சந்திரன், மேஜர் நவம் ஆகியோர் இவர்களில்; முக்கியமானவர்கள் நவம் பெயரில் “நவம் அறிவுக்கூடம்” என காயமுற்ற போராளிகளுக்கான அறிவுக்கூடம் ஒன்றை புலிகள் நடாத்தியிருந்தனர். மேஜர் சந்திரன் பெயரில் சந்திரன் பூங்கா ஒன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கப்டன் பூங்குயிலின் நினைவுக்கல் புதுக்குடியிருப்பில் நிறுவப்பட்டிருந்தது.
போராளிகள் தவிர வன்னியில் வசித்த மலையகக் கல்வியாளர்களின் பங்கும் மகத்தானது. அவர்களில் ஒருவர் தான் மருத்துவர் சத்தியமூர்த்தி. யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் பணிப்பாளராக இருக்கும் இவரே வடமாகாண சுகாதார பணிப்பாளராகவும் கடமையாற்றுகின்றார். போர்க்காலத்தில் இவரின் மருத்துவ பங்களிப்பு மகத்தானது. பி.பி.சி.வானொலிக்கு போர்க்கால நிலவரம் பற்றி அவர் கூறிய தகவல்கள் அன்றைய காலத்தில் மிகவும் பிரசித்தமானவையாக இருந்தன. யாழ் போதனா வைத்தியசாலைக்கு உயிரூட்டியவர் இவர் தான். இவரின் நிர்வாகத்திறமையை பார்த்து மலைக்காதவர்கள் எவரும் இல்லை.
அடுத்த வாரம் வடக்கு  கிழக்கு – மலயக உறவை கட்டியெழுப்புவதில் உள்ள சவால்களைப் பார்ப்போம்.

Recommended For You

About the Author: Editor Elukainews