
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.





கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ஆனாலும் குறித்த பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை.
அதனால் அக்காணி உரிமையாளர்கள் அப்பகுதியில் குடியமர முடியாத நிலை காணப்படுகிறது.
அந்நிலையில் அப்பகுதிக்குள் ஊடுருவும் இரும்பு திருடர்கள் வீடுகளில் உள்ள இரும்புகளை திருடி சென்றனர். அது குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலர் , காங்கேசன்துறை பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு பல தடவைகள் வீட்டு உரிமையாளர்கள் முறைப்பாடு செய்தும் திருட்டினை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் , இரும்பு திருடர்கள் சுதந்திரமாக அப்பகுதிகளில் நடமாடி திரிகின்றனர்.
பிரதேச செயலரிடம் முறையிட்ட போது , இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக தம்மிடம் அப்பகுதியை கையளிக்காத நிலையில் தாம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என முறைப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கின்றார்.
பொலிஸாரிடம் முறையிட்டோருக்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதாக கூறிய போதிலும் , அப்பகுதியில் கண்காணிப்புக்கு சுற்றுக்காவல் பகுதியில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கண் முன்னால் இரும்பு திருடர்கள் திருட்டில் ஈடுபடுகின்றனர். அது தொடர்பில் பொலிசாரிடம் கேட்ட போது , பழைய இரும்புகள் தானே அவர்கள் கொண்டு செல்லட்டும் என பதில் அளித்துள்ளனர்
இவ்வாறாக பொறுப்பு வாய்ந்தோர் திருட்டினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தவறி வரும் நிலையில் தற்போது வீட்டின் பாகங்களை உடைத்து திருட்டில் ஈடுபட தொடங்கியுள்ளனர்
அது தொடர்பில் தகவல் அறிந்து வீட்டு உரிமையாளர்கள் தமது காணிக்குள் வரும் போது , இரும்பு திருடர்கள் தம்மை புலனாய்வு பிரிவினர் என கூறி , காணி இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டினுள் தான் இருக்கிறது. இதற்குள் நீங்கள் வர கூடாது என அச்சுறுத்தி அனுப்பி விட்டு , உரிமையாளர் கண்களுக்கு முன்னாலையே வீடுகளை உடைத்து இரும்புகளை திருடி செல்கின்றனர்.
பிரதேச செயலரோ , இராணுவத்தினரோ , பொலிஸாரோ திருட்டுக்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காது இருப்பதால் , உரிமையாளர் கண்களுக்கு முன்னாலையே திருடர்கள் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் யாரிடம் இனி முறையிடுவது என தெரியாத நிலையில் தமது கண்களுக்கு முன்னால் தமது வீடுகளை உடைத்து திருடுபவர்களை கண்ணீர் மல்க உரிமையாளர்கள் பார்த்து மனம் நொந்து வருகின்றார்