வன்னியின் நன்னீர மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட சில படகுகள் இனந்தெரியாத குழுவினரால் எரிக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான நான்கு படகுகள் ஓகஸ்ட் 20ஆம் திகதி இரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்புக் குளத்தில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 38 சிங்கள மீனவர்களை ஒட்டுசுட்டான் பொலிஸார் ஓகஸ்ட் 6ஆம் திகதி கைது செய்ய அப்பகுதி முஸ்லிம்களும் தமிழர்களும் காரணமாக அமைந்திருந்தனர்.
இவர்களில் 9 பேர் பொலிஸ் பிடியில் இருந்து தப்பயிருந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கடந்த ஓகஸ்ட் 7ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மீனவர்கள், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுக்கு சொந்தமான வளங்களை வெளியார் பலவந்தமாக கைப்பற்றுவதற்கு இடமளிக்க வேண்டாம் என மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.
குமுழமுனை, தண்ணிபுரம், ஹிஜ்ராபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமே தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்குவதற்கு, மாவட்ட அபிவிருத்திக் குழு தீர்மானித்துள்ளதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 6ஆம் திகதி, சிங்கள மீனவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த 17 தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களை வாக்குமூலம் வழங்குவதற்காக வருமாறு அழைத்த ஒட்டுசுடான் பொலிஸ் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 29 சிங்கள மற்றும் 17 தமிழ் மற்றும் முஸ்லிம்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடிக்க அனுமதியுள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் கஜபாபுர, சம்பத் நுவர, ஜனகபுர, கல்யாணபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிங்கள மக்கள் அனுமதியின்ற தண்ணிமுறிப்பு ஏரியில் மீன்பிடியில் ஈடுபட்டதாக இம்மாத ஆரம்பத்தில் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.