மேர்வின், வீரசேகர, கம்மன்பில மூவரும் இணைந்து இனக் கலவரத்துக்கு திட்டம்? – சுகாஷ் சந்தேகம்

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, தமிழ் மக்களை கடித்து, தமிழ் மக்களுடைய அரசியல் பிரதிநிதிகளை கடித்து இறுதியாக நீதிபதிகளையும் கடித்து குதறத் தொடங்கியுள்ளது சிங்கள பௌத்த பேரினவாதம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் பாராளுமன்றத்திலேயே ஆளும் தரப்பை பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவர்கள், முல்லைதீவு மாவட்ட நீதிபதி அவர்களே மனநோயாளி என்று விழித்து வன்மத்தை கக்கியிருக்கின்றார்.
இது நாகரீக மனித குலத்தினாலும், ஜனநாயக சமூகத்தினாலும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆகிய நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன், சரத் வீரசேகரவுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவருடைய காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை தடுக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரி நிற்கின்றோம்.
சரத் வீரசேகர அவர்களுடைய கருத்துக்களை பார்க்கின்ற பொழுது, அவை தற்செயலாக முன்வைக்கப்படுகின்ற கருத்துகளாக நாங்கள் பார்க்கவில்லை.
இந்த வாரத்தை மாத்திரம் எடுத்து கொண்டால் மேர்வின் சில்வா அவர்கள் கூறுகின்றார் தமிழர்களின் தலைகளை கொய்வேன் என்று, சரத் வீரசேகர கூறுகின்றார் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை பார்த்து மனநோயாளி என்று, உதய கம்மன்பில அவர்கள் கூறுகின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பில் உள்ள வீட்டிற்கு முன்பாக போராட்டம் செய்வேன் என்று.
இவர்களுடைய கருத்துக்களை நாங்கள் தொகுத்து நோக்குகின்ற பொழுது, இந்த சிங்கள பௌத்த பேரினவாதத்தினுடைய அதிதீவிர முகவர்களாக இருக்க கூடிய இவர்கள் அனைவரும் சேர்ந்து மீண்டும் ஒரு இனக் கலவரத்திற்கு திட்டமிட்டு இருக்கிறார்களா என்ற நியாயமான சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது.
சரிந்து கிடக்கின்ற சிங்கள பௌத்த வாக்கு வங்கியை கட்டி எழுப்பி, தங்களுடைய அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், தமிழ ர்களை திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்பட்ட ரீதியில் இனவழிப்பு செய்வதற்கான தமது பொறிமுறையை தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவும், மீண்டும் ஒரு இன அழிப்பிற்கு ஒரு இனக் கலவரத்திற்கு இவர்கள் வித்திடுகின்றார்களா என்று சந்தேகம் எங்களுக்கு எழுந்து நிற்கின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் அமைப்புகளும், சிவில் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை போல  இலங்கையிலே நடைபெற்ற இனவழிப்பிற்கு தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உள்ளக பொறிமுறை ஊடாக ஒரு உலக விசாரணையின் ஊடாக நீதி கிடைக்கப் பெற மாட்டாது என்ற விடயத்தை சரத் வீரசேகரவின் கருத்துக்கள் மீளவும் ஒரு தடவை உறுதிப்படுத்தி இருக்கின்றது.
ஏனென்றால் சிங்கள பௌத்த பேரினவாதமும், ஆட்சியாளர்களும், தாங்கள் விரும்புகின்ற தீர்வுகளையும் கருத்துகளையும் தான் இலங்கையில் இருக்கின்ற நீதிமன்றங்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள், ஆணையிடுகின்றார்கள்.
தங்களுடைய கருத்துக்கு, தங்களுடைய நிலைப்பாடுகளுக்கு மாறாக உண்மையை உரைக்கின்ற எந்த ஒரு தீர்ப்பையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள போவது கிடையாது. அவ்வாறு தீர்ப்பை வழங்குகின்றவர்களை மனநோயாளிகள் என்ற கோதாவுக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு எதிராகத்தான் இந்த சிங்கள பௌத்த பேரினவாதம் நடவடிக்கை எடுக்குமே தவிர, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீதியோ தீர்வு கிடைக்கப் பெற மாட்டாது என்பது இந்த கருத்தின் ஊடாக மீள ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
நாங்கள் வலியுறுத்த விரும்புகின்ற விடயங்கள் என்னவென்றால், மரியாதைக்குரிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அவர்களை, சரத் வீரசேகர அவர்கள் அநாகரிகமாக மனநோயாளி என்று விழித்ததை நாங்கள் வன்மையாக கண்டிப்பதோடு ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலைக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உள்ளாக விசாரணை ஊடாக ஒரு தீர்வு கிடைக்கப் பெற மாட்டாது என்பதையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தி இருக்கின்றதாகவும் வலியுறுத்த விரும்புகின்றோம் – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews