மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த விழாவில் கலந்துகொண்டு ஜனாதிபதி ஆற்றிய உரை பொருத்தமற்றது என கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 15ஆம் திகதி மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த விழாவில் கலந்து கொண்டு 2048ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி உரை நிகழ்த்தியிருந்தார்.
கத்தோலிக்க திருச்சபையால் வெளியிடப்படும் இலங்கையின் பழமையான சிங்களப் பத்திரிகையான ஞானார்த்த பிரதீபா, இந்த ஞாயிற்றுக்கிழமை இதழில் “மடு தேவாலயம் மற்றும் ஜனாதிபதியின் உரை” என்ற தலைப்பின் கீழ் ஜனாதிபதியின் உரைக்கு ஆட்சேபனை வெளியிட்டுள்ளது.
“மடு தேவாலயம் ஒட்டு மொத்த இலங்கை மக்களாலும் புனிதமான இடமாகப் போற்றப்படுவதைச் சுட்டிக்காட்டும் ஞானார்த்த பிரதீபாவின் ஆசிரியர், கத்தோலிக்க மற்றும் சமய சார்பற்ற இருபாலரும் இவ்விழாவிற்கு அங்கு செல்வதாக வலியுறுத்தியுள்ளார் ‘அன்னை மருத மடுவின் முன் விருப்பங்களையும் துக்கங்களையும் மிகுந்த பக்தியுடன் வைப்பதுடன், அன்னையான கடவுளிடமிருந்து அவரது பரிந்துரையின் மூலம் பெற்ற அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி செலுத்துதல்.”
“அன்றிலிருந்து இன்று வரை மருத மடு விகாரையை புனிதமான, வணக்கத்திற்குரிய பூமியாகக் கருதும் கத்தோலிக்க பக்தர்கள், அந்த பூமியின் புனிதத்துக்குக் கேடு விளைவிக்கும் சிறு வார்த்தைகளைக்கூட உச்சரிக்காமல் கவனமாக இருக்கிறார்கள். மருத மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் மிகுந்த பக்தியுடன் கலந்து கொள்கின்றனர். தெய்வீக ஆராதனையின் பின்னர், மருத மடு அன்னையின் திருவுருவத்தை ஏந்தி ஊர்வலத்தை முழு பக்தியுடன் எதிர்நோக்குகிறார்கள்.”
அப்போது இடம்பெற்ற ஜனாதிபதியின் உரையானது தம் மக்களின் ஆன்மீக தியானத்திற்கும் நல்லொழுக்கத்திற்கும் தடையாக அமைந்ததாக பலரது அபிப்பிராயம் இருப்பதாக ஞானார்த்த பிரதீபா தெரிவிக்கின்றது.
சமய ஸ்தலம் ஒன்றின் வழிபாடுகளின் போது அரசியல்வாதிகளுக்கு விசேட இடம் வழங்கவோ, உரை நிகழ்த்தவோ வாய்ப்பளிக்கக் கூடாது என ஞானார்த்த பிரதீபா வலியுறுத்தியுள்ளது.
“மறுபுறம், நாட்டின் தலைமைக் குடிமகன் என்ற முறையில், ஜனாதிபதி, தான் எங்கே இருக்கிறோம், யாரிடம் பேசுகின்றோம், அதற்கேற்ப என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்ற உணர்வு இருக்க வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை எனவும், வாக்குறுதிகள் நிறைந்த அரசியல் பேச்சுகள் அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றதல்ல என்பதை அவர் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.”
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருட மடு திருவிழாவின் காலை ஆராதனையில் கலந்து கொண்டதுடன் வருடாந்த மடு திருவிழாவானது, தேசிய கலாசாரத்தின் ஒரு அங்கம் என்பதனால் இந்த நிகழ்வை தேசிய நிகழ்வாக பாதுகாத்து அதனை தொடர்வதற்கு ஆதரவை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என தெரிவித்தார். .
மன்னாரை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில் சேவை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
“மடு மாதா குடிகொண்டிருக்கும் இந்த மன்னார் பிரதேசம் அதிகளவு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம் மன்னார் மாவட்டத்தை எரிசக்தி மையமாக உருவாக்க முடியும். மேலும், பூநகரியை எரிசக்தி கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இந்த புனித பூமியும், வனமும் பாதுகாக்கப்படும் வகையிலேயே இந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நான் கூற விரும்புகின்றேன். மேலும், இப்பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளின் போது இங்குள்ள அருட்தந்தைகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.”
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பாராட்டுக்குரியது எனவும் வத்திக்கான் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் ஆசீர்வாதமும் இதற்கு கிடைக்கும் எனவும் மடு திருவிழாவில் கலந்து கொண்ட இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
“நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய பாரிய பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய பிரையன் உடைக்வே ஆண்டகை, நாட்டைப் பிளவுபடுத்தும் மத முகவராக மாறுவதா அல்லது நாட்டை ஒன்றிணைக்கும் மதத் தலைவராக மாறுவாரா என்பது அவரவர் செய்யும் செயற்பாடுகளிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.” என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.