
முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் காணிகளை அரச நிறுவனங்கள் பலவந்தமாக சுவீகரிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு வாழ்வதற்குக் கூட காணி இல்லாத 3,389 குடும்பங்கள் உள்ளதாக தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஆரம்பத்தில் குறித்த பிரதேசத்தில் உள்ள 28,626 இளைஞர்களுக்கு தலா ஒரு ஏக்கர் காணி வழங்குமாறு மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் வேலையற்ற இளைஞர் யுவதிகள், மாவட்டச் செயலகத்தின் அறிவித்தலுக்கு அமையவே இந்த கோரிக்கையை முன்வைத்ததாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகள் தொடர்பாக ஓகஸ்ட் 26ஆம் திகதி வெளியிட்ட ஊடக அறிக்கையில் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டு, முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலத்தில் 36.27 வீதம் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் இருந்ததாகவும் இதன் பரப்பளவு 222,006 ஏக்கர் எனவும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் மேலும் 167,484 ஏக்கர் காணிகள் வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள வனவள திணைக்களம், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திடம், மேலும் 42,631 ஏக்கர் காணிகளை கோரியுள்ள நிலையில், தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த காணியில் 74.24 வீதம் வனவள திணைக்களத்தின் கீழ் உள்ளதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்துகின்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அரசாங்க பாதுகாப்பு தரப்பினர் பாரியளவிலான காணிகளை கையகப்படுத்தியுள்ள போதிலும், அப்பிரதேசத்தில் 3,389 குடும்பங்கள் வாழ காணியின்றி தவிப்பதாக துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிக இராணுவத்தை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை மீளப்பெறுமாறு அரசை வலியுறுத்தும் போராட்டங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது முன்மொழிவுகளையும் எதிர்கால நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் முன்வைத்து, ஓகஸ்ட் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பான காணி பயன்பாட்டு வரைபடங்கள், தற்போதைய காணி பயன்பாட்டு முறைகள் மற்றும் பிரதேச செயலாளர்களின் முன்மொழிவுகளை மையமாகக் கொண்டு தரவு அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான குழு காணி தொடர்பான விடயங்களை ஆராய்ந்து அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான சுமார் 89,000 மாடுகள் காணப்படுவதாகவும், அந்த கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலத்தை ஒதுக்குமாறு மாவட்டச் செயலகத்திடம் விடுத்த கோரிக்கைக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை எனவும் துரைராசா ரவிகரன் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.