வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கமானது இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முயலும் நாடுகள் தமது நாட்டில் அல்லது தமது அன்பிற்குரியவர்கள் வாழும் நாட்டில் இப்படி நடந்துகொள்வார்களா? இலங்கையில் 1958ம் ஆண்டில் இருந்து தமிழர் மீதான இனவழிப்பும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலும் நடந்தேறியவண்ணம் உள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோரை படுகொலை செய்தும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை வலிந்து காணாமலாக்கியும், பல்லாயிரக்கணக்கானோரை ஊனமுற்றவர்கள் ஆக்கியும் தமிழினத்தை துவம்சம் செய்த சிறிலங்கா அரசுக்கு எவ்வித கண்டனத்தையும் தெரிவிக்காத சர்வதேசம், கொலையாளியையே நீதிபதியாக்க கடும் பிரயத்தனப்படுவது ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் கேட்பதற்கு நாதியற்ற தமிழர்கள் என்பதாலா? ஆனால் சிரியா, உக்ரைன் போன்ற நாடுகளில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே பல நாடுகள் கண்டனங்களை தெரிவிப்பதும் எவ்வித தாமதமின்றி உடனடி நடவடிக்கைகளை எடுப்பதும் எம்மை ஆச்சரியப்படவைக்கிறது. ஏன் இந்த பாரபட்சம்?
OMP தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பதில்
UN மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் திருமதி மிசெல்லே பசேலெட் அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது அறிக்கையில், OMP மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றுக்கான சமீபத்திய நியமனங்கள் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை வலுவிலகச் செய்வதாகவும், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்று கொடுக்க சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பரப்படுத்தவும்.
நீதியை அடைவதற்கு, சுதந்திரமான சர்வதேச பொறுப்புக்கூறல் செயல்முறை மட்டுமே போதுமானது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பரப்படுத்துவதன் மூலமே நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரையும் , முந்தைய மனித உரிமைகள் ஆணையாளர்கள், சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு உட்பட பல ஐ.நா அதிகாரிகளால் வழிமொழியபட்டதையும் இதில் சுட்டி காட்ட விரும்புகின்றோம்.
ரோம் சாசனத்தில் கைச்சாத்திடாத வடகொரியா, சிரியா, ரஷ்யா, மியன்மார் போன்ற நாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி தேட வழிமுறைகளை கண்டறிய முடிந்த சர்வதேச சமூகத்தினால் சிறிய நாடான சிறிலங்காவை நீதியின் முன் நிறுத்த பின்னாடிப்பதின் காரணத்தை எம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அத்துடன் சிறிலங்காவின் பொருளாதார நிலையை சீர்படுத்த முயலும் நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் மீண்டும் ஒரு மனித பேரழிவு, இனவழிப்பு இந்த மண்ணில் நிகழாமையை உறுதிசெய்ய வேண்டும். சிறிலங்கா அரசு ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுவதை முன் நிபந்தனையாக முன்வைக்க வேண்டும்.
சிறிலங்கா அரசுக்கு அவகாசம் கொடுத்து காலத்தை இழுத்தடித்ததன் மூலம் 180 இற்கும் மேற்பட்ட பெற்றோரை இழந்து “கண்கண்ட நேரடியான சாட்சிகள் 180 பேர்”அழிந்தது தான் மிச்சம். மீண்டும் TRC என்ற பெயரில் வேறோர் உள்ளக பொறிமுறையை எங்கள் மீது திணித்து கால இழுத்தடிப்புக்கு துணை போவதன் மூலம் மிகுதியுள்ள நேரடிசாட்சிகளான எங்களையும் இறக்க விட்டு சாட்சிகள் அழிவதற்கு துணை போகாமல் எங்களின் கோரிக்கையான சர்வதேச விசாரனை ஒன்றின் மூலம் ICC க்கு அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் எங்களுக்கு விரைவான நீதியை பெற்றுத்தர சர்வதேசமும் ,ஐ.நா வும் முன்வரவேண்டும் என்று இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மீண்டும் ஒரு தடவை எமது கோரிக்கையை முன் வைக்கின்றோம்.
எங்கள் அன்புக்குரியவர்களின் அவல நிலையை அறிய ஒரு சர்வதேச குழுவை நியமிக்கவும்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் என்ற வகையில், எங்களின் அன்புக்குரியவர்களின் அவலநிலையை சுயாதீனமாக ஆராய்வதற்காக சர்வதேச பிரமுகர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் தான் அவர்கள் காணாமல் போன சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வர முடியும்.
இனவழிப்பு மீள நிகழாமைக்கு நிரந்திர அரசியல் தீர்வு அவசியம்
அத்துடன் இன்று வரை தொடர்ந்து நிகழ்ந்து வரும் இனவழிப்பும் பெளத்த மயமாக்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்நிலை மாறி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் இத்தீவில் அமைதி நிலை ஏற்படவும் ஓர் நிரந்திர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும். இத்தீர்வானது வடக்கு கிழக்கு மாகாணங்களை தாயகமாக கொண்ட மக்களிடையே சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் சர்வசன வாக்கெடுப்பினூடக தீர்மானிக்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.