
வவுனியாவில் 10ஆம் தர மாணவன் மீது அதே பாடசாலையில் கல்விகற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் தரம்10 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது அதேபாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அண்மையில் காதில் அறைந்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் குறித்த மாணவனின் செவியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவனை குறித்த ஆசிரியரே சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பாடசாலை அதிபர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வலயக்கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரான சு.அன்னமலர் தெரிவித்திருந்தார்.