
நேற்றையதினம் (02) பட்டப்பகல் வேளையில் கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரி ஒருவர் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டு கடத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கடத்தல் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தீவிர விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், இன்று (03) அதிகாலை கடத்தப்பட்ட நபர் கிளிநொச்சி பகுதியில் வைத்து மீட்டடதோடு குறித்த கடத்தலுடன் தொடர்புடைய ஆறுபேர் கொண்ட கும்பல் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் பழக் கடையில் இருந்து எடுத்துச் சென்ற சமையல் எரிவாயு கொள்கலனும் மீட்கப்பட்டுள்ளது. 

கனகாம்பிகை குளம், பரந்தன், கரடிப்போக்கு சந்தி பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கடத்தல்காரர்களுக்கு, பழக்கடை வியாபாரி மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட பணத்தொகை கொடுக்க வேண்டி இருந்த நிலையில், அந்த தொகையில் ஒரு தொகை பணம் கொடுத்த நிலையில் தற்போது ஒன்றரை இலட்சம் ரூபா கொடுக்க வேண்டி உள்ளதாகவும், அதனால் தான் இந்த கடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அறுவரையும் இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.