யாழ்ப்பாணத்தில் எட்டு வயதான சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன் கடிதத்தின் பிரதிகளை சுகாதார அமைச்சு, வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட தரப்புகளுக்கும் அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்தில் எமது மகளான எட்டு வயதுடைய சாண்டில்யன் வைசாலியின், இடது கை, குழந்தை நல விடுதியில் தங்கி சிகிச்சை பெற்றபோது 12ஆம் விடுதியைச் சேர்ந்த வைத்திய நிபுணர், வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களின் பிழையான செயலின் விளைவாக அதாவது 02.09.2023 ஆம் திகதியன்று மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எமது மகள் இன்னமும் அதிதீவிர சிசிக்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் எமது எட்டு வயதான மகளின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குட்படுத்தப்பட்டு சவாலாக மாற்றப்பட்டுள்ளது.
எனவே சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நியாயமான தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.