
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்று இடம்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட தாதியை பணி நீக்கம் செய், பணிப்பாளரே விசாரணைகளை மூடி மறைக்காதே உள்ளிட்ட கோஷங்கள் இதன்போது எழுப்பபட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மகஜரொன்றை கையளிப்பதற்கு பொதுமக்களிடமும் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்றுவருகிறது.

குறித்த போராட்டத்தில் சிறுமியின் உறவினர்களுடன் அரசியல் தரப்பினர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்துகொண்டுள்ளனர்.
இந் நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


