தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்டத்தின் வேதாளை மீனவ கிராமத்திலுள்ள வீடு ஒன்றில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபா மதிப்புள்ள 6 கிலோ ஐஸ் போதைப்பொருள், மண்டபம் பொலிஸாரிடம் சிக்கியது.
குறித்த ஐஸ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தமுயன்ற பெண் உட்பட 4 பேரை மண்டபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த 7 ஆம் திகதி மண்டபம் அடுத்துள்ள வேதாளை எம.;ஜி.ஆர் நகரிலுள்ள ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராமநாதபுரம் டி.ஐ.ஜியின் உத்தரவில், பொலிஸார் குறித்த வீட்டினை சோதனையிட்டபோது வீட்டில் 6 பொதிகளில் 6 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சென்னையிலிருந்து ஐஸ் போதைப்பொருள் காரில் கொண்டுவரப்பட்டதாக தெரியவந்தது.
அதனையடுத்து இருவரையும் கைதுசெய்த போலிஸார், மண்டபம் பொலிஸ்; நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் அடிப்படையில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் ஐஸ் போதைப்பொருளை நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்கு உடந்தையாக இருந்தமை தெரியவந்தது.
அதனையடுத்து குறித்த இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.