அரசியல் கைதிகளின் விடுதலை என்பது கானல் நீரே, தமிழ் தலைமைகளும் ஆட்சியாளர் பக்கமே நிற்கின்றனர். தியாகி திலீபனின் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல, முழு உலகிற்கும் அகிம்சையை உண்ணாவிரதத்தால் போதித்து உயிர் தீபமாய் திகழும் தியாகி திலீபனின் உயிர்த்தியாக 34 ஆம் அகவையிது. புத்தன், கிறிஸ்து, நபியின் வாழ்வு போதனைகளையும், சமயங்களின் அடிப்படை தத்துவமான மனித மாண்பையும் கொலை செய்த கொடுங்கோன்மை, பெரும்பான்மை இன மத ஆட்சியாளர்களே திலீபனின் உண்ணா விரதத்தை அவமதித்ததோடு உண்ணாவிரத கோரிக்கையையும் நிறைவேற்றத்தவறினர்.
சிறைச்சாலைகளிலும், இராணுவ முகாம்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படல் வேண்டும், அவசரக்கால சட்டத்தை நீக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் உட்பட முன்வைத்த ஐந்து கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் மிக இலகுவில் நிறைவேற்றி இருக்க முடியும்.
இந்திய இராணுவம் அன்று இலங்கையிலிருந்த காலகட்டத்தில் அதனை நோக்கி, இலங்கை அரசு இந்திய ஆட்சியாளர்கள் தள்ளி இருக்கவும் முடியும். அதனைச் செய்யத் தவறியமைக்கு முக்கிய காரணம் புத்த நாடு என்று கூறும் இலங்கை ஆட்சியாளர்கள் புத்தனைக் கொன்று சிங்கள புத்தனைச் சிங்கக் கொடியில் உயர்த்தி நின்றமையாகும். அதுவே இன்றும் தொடர்கிறது.
அதுமட்டுமல்ல தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் கைதிகளாக ஏற்காது, தமிழரின் தாயக கோட்பாட்டுக்கும், சுயநிர்ணய உரிமை அரசியல் செயல்பாட்டுக்கும் வாழ்நாள் தண்டனை கொடுப்பதே பேரினவாத ஆட்சியாளர்களின் நோக்கமாகும் என்று மேலும் தெரிவித்தார்.