
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்றது.
தெற்காசிய பிராந்தியத்தின் நாடுகளாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இரு நாட்டு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.
மேலும், கடந்த காலத்தில் பங்களதேஷிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை குறுகிய காலத்துக்குள் மீளச் செலுத்திவிடும் என எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த பங்களாதேஷ் பிரதமர், அந்த கடனை செலுத்த முடிந்துள்ளதன் ஊடாக இலங்கை பொருளாதார ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றம் தெரிகிறது என்பதோடு, அதனை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்வதன் ஊடாக இலங்கை சுமூகமான நிலைமையை அடைந்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
கடந்த சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு, பங்களாதேஷ் வழங்கிய அசைக்க முடியாத ஆதரவிற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் பங்களாதேஷ் மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதன்போது, பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கிடைத்து வரும் ஆதரவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, பங்களாதேஷின் பெருந்தன்மைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
முன்னதாக பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த சந்தர்ப்பத்தை இழந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் பங்களாதேஷிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.