வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அறிக்கையிடச் சென்ற முன்னணி தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை, அச்சுறுத்தி இடையூறு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை கடற்படையின் புலனாய்வு அதிகாரி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் வகையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் டி. பிரதீபன், நான்கு வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை அச்சுறுத்திய கடற்படைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு நேற்று (21) பிடியாணை பிறப்பித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மே 2009 இல் இரத்தக்களரியில் முடிவடைந்த கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில், தங்கள் அன்புக்குரியவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பலவந்தமாக காணாமல் போனதன் பின்னர்,
2,400 நாட்களுக்கும் மேலாக, துயரத்தில் உள்ள தமிழ் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் தங்கள் உறவுகளை தேடும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இவர்களின் இந்த தொடர் போராட்டத்தில் இதுவரை 180 உறவினர்கள் நீதி கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில், 2019 ஏப்ரல் 07ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து, வட்டுவாகல் பாலம் வரை சென்ற, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கண்டன ஊர்வலத்தை, முல்லைத்தீவு ஊடக மையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் அறிக்கையிட்டுக்கொண்டிருந்தார்.
அவரும் ஏனைய ஊடகவியலாளர்களும் போராட்டத்தை அறிக்கையிட்டுக்கொண்டிருந்தபோது
இனந்தெரியாத நபர் படமெடுப்பதை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போது, ஊடகவியலாளர் தவசீலன் குறுக்கிட்டு, அந்த நபர் யார், எதற்காக போராட்டத்தை படமெனடுக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக, அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நபர், போராட்டக்காரர்களால் துரத்திச் செல்லப்பட்டு பிடிக்கப்பட்ட பின்னர் தான் கடற்படை அதிகாரி என்பதை ஒப்புக்கொண்டார்.
சம்பவ இடத்திற்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தும் அவர்கள் சமூகமளிக்கவில்லை. எனவே, ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இவரை கோட்டாபய கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றதையடுத்து, அவர் கடற்படை அதிகாரி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
முகாமிற்கு வந்த பொலிஸாரிடம் இவரை ஒப்படைத்த போராட்டக்காரர்கள் பின்னர் திரும்பிச் சென்றனர். அதன் பின்னர் கடற்படை அதிகாரியும் அவரது சாட்சியாக வந்த மற்றுமொரு கடற்படை அதிகாரியும் ஊடகவியலாளருக்கு எதிராக பொய்யான தகவல்களை முன்வைத்து முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட பொலிஸார் ஊடகவியலாளர் தவசீலனை வரவழைத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பிணையில் விடுவித்தனர்.
இது தொடர்பான வழக்கு 2023 செப்டெம்பர் 21ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரரான கடற்படை புலனாய்வு அதிகாரி விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.
இதற்கமைய, கடற்படை புலனாய்வு அதிகாரி மற்றும் அவரது சாட்சியாக பொலிஸில் முறைப்பாடு செய்த மற்றைய அதிகாரியும் கைது செயது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு முல்லைத்தீவு நீதவான் டி.பிரதீபன் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு 2023ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, முறைப்பாடு செய்த கடற்படை புலனாய்வு அதிகாரி விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.
குறித்த அதிகாரியை 2023 செப்டெம்பர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜா அன்றைய தினம் அழைப்பாணை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் பெப்ரவரி 29, 2024 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஊடகவியலாளர் தவசீலனுக்கு எதிராக கடற்படை அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட மனு “வெறும் பழிவாங்கும் செயலாகும்” என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்புப் படையினரின் அச்சுறுத்தல்கள், கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் இருந்தபோதிலும், ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், நாட்டின் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதியில் அரச அனுசரணையுடன் கூடிய குற்றங்கள் உட்பட தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அறிக்கையிடுவதில் ஈடுபட்டுள்ளார்.