திருகோணமலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகன ஊர்தி தாக்கப்பட்டிருக்கிறது. திலீபனின் படத்தை ஏந்திய அந்த ஊர்தி கடந்த ஆண்டும் அந்த வழியால் சென்றிருக்கிறது. இது இரண்டாவது தடவை. அது தாக்கப்பட்ட இடம் கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் கீழ் அபகரிக்கப்பட்ட தமிழ் நிலம். கடந்த ஆண்டு அந்த ஊர்தி குறிவைக்கப்படவில்லை. இந்தமுறை தான் அது குறிவைக்கப்பட்டிருக்கிறது.அந்த ஊர்தியை குறிவைத்து அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்பது ஏற்கனவே மட்டக்களப்பில் உணர்த்தப்பட்டிருக்கிறது.அப்படி ஒரு தாக்குதலை முன்னணி எதிர்பார்க்கவில்லை என்பது காணொளிகளைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. தம்மைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ஆளணிகளோடு அவர்கள் வரவில்லை என்பதும் தெரிகிறது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனப்படுகிறவர் தனியன் அல்ல.அவர் ஒரு சமூகம்.அவருக்கு வாக்களித்த மக்களின் பிரதிநிதி.ஆனால் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மிகச் சிலரோடு நிற்கிறார்.அதுவும் தாக்கியவர்களுக்குத் துணிச்சலைக் கொடுத்திருக்கும்.போலீசார் தாக்குதலைத் தடுக்கவேண்டும் என்ற வேகத்தோடு செயல்படவில்லை.தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மத்தியில் ஊடகவியலாளர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த ஊடகவியலாளர்களில் சிலர் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரைப் பாதுகாக்க முற்பட்டிருக்கிறார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மத்தியில் பெண்கள் காணப்படுகிறார்கள். அதை ஒரு சமூகத்தின் தாக்குதலாகக் காட்ட வேண்டும் என்று நன்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
முன்னணி கடந்த சில மாதங்களாக தமிழ் அரசியலை நொதிக்கச் செய்கின்றது. தமிழ் எதிர்ப்பு அரசியலின் ஈட்டி முனையாக அக்கட்சி மேலெழுந்து வருகிறது. குறிப்பாக நிலப்பறிப்பு, விகாரைகளைக் கட்டுவது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அக்கட்சி தீவிரமாக எதிர்ப்பை காட்டி வருகிறது. எனவே அக்கட்சிக்கு அதன் வரையறைகளை உணர்த்தும் விதத்தில் அச்சுறுத்தலைக் கொடுப்பதே அத்தாக்குதலின் நோக்கமாக இருக்கலாம்.ஏற்கனவே கஜேந்திரகுமாரைக் கைது செய்து பின் வெளியில் விட்டமையும் அவருடைய கொழும்பு வீட்டை முற்றுகையிட முற்பட்டமையும் அந்த நோக்கத்தோடுதான்.கொழும்பு வீட்டை முற்றுகையிட முற்பட்டமை.கஜேந்திரக்குமாரை விடவும் அவருடைய தாயாருக்கு அச்சுறுத்தலானது. ஏற்கனவே கணவனைப் பறிகொடுத்தவர். அவரைப் பொறுத்தவரை அதுதான் அவருடைய வசிப்பிடம்.அங்கே அவருக்கு நெருக்கடியைக் கொடுப்பதன் மூலம் அவருடைய மகனுக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம். எனவே திருகோணமலையில் நடந்த தாக்குதலானது 2009க்குப் பின் தமிழ் எதிர்ப்பு அரசியலுக்கு இருக்கக்கூடிய வரையறைகளை உணர்த்தும் நோக்கிலானது என்று சொல்லலாம்.
ஒருபுறம் அது முன்னணியை அச்சுறுத்தும் நோக்கிலானது.இன்னொருபுறம் அதன்மூலம் முன்னணியை ஓரளவுக்கு பலப்படுத்தும் உள்நோக்கமும் இருக்கலாம்.தமிழ்த் தேசியப் பரப்பில் வெளிப்படையாக இந்திய எதிர்ப்பை முன்னெடுக்கும் கட்சி அது.அக்கட்சியை குறிப்பிடத்தக்க அளவுக்கு பலப்படுத்தினால்,தமிழ்மக்கள் மத்தியிலேயே இந்திய எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தலாம்.அதன்மூலம் அரசாங்கத்தின் வேலை இலகுவாகிவிடும் என்ற உள்நோக்கமும் அத்தாக்குதலுக்கு இருக்கக்கூடும்.
அந்த ஊர்தி அந்த வழியால் போனதால் சிங்கள மக்கள் ஆத்திரமூட்டப்பட்டார்கள் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. பொதுவாக எல்லா எதிர்ப்பு அரசியற் களங்களிலும் இந்த வாதம் முன்வைக்கப்படுவதுண்டு. ஆயுதப் போராட்டத்தின் தொடக்க காலங்களில் கொரில்லாத் தாக்குதல்கள் நடந்த போதும் இந்த வாதம் முன்வைக்கப்பட்டது. குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகிறார்கள்.அதனால் குளவிகள் கலைந்து அப்பகுதியில் இருக்கும் சாதாரண மக்களைக் கொட்டும் என்றும் விளக்கம் தரப்பட்டது.எதிர்ப்பு அரசியலின் பண்பே அத்தகையதுதான். எதிர்ப்பு கூர்மையடையும் பொழுது அதற்கு எதிரான ஒடுக்குமுறையும் கூர்மை அடையும்.ஒடுக்கும் தரப்பு அதன் மூலம் தன்னை அம்பலப்படுத்தும்.அதனால் ஒடுக்கப்படும் தரப்பு மேலும் அரசியல் மயப்படுத்தப்படும். ஒடுக்குமுறைக்கு எதிராக அணி திரளும். உலகமெங்கிலும் எதிர்ப்பு அரசியல் அப்படித்தான் வளர்ந்திருக்கிறது.
திருமலைச் சம்பவம் முன்னணியின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும். அதேசமயம் அது திருகோணமலையில் இளம் தலைமுறையினர் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தக் கூடியது.கடந்த 14 ஆண்டுகளாக ஒரு தலைமுறை அரசியல் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது.அதில் ஒரு பகுதி ஏன் சிங்கள பௌத்தத்தை எதிர்க்க வேண்டும் என்று கேட்கத் தொடங்கிவிட்டது. இன்னொரு பகுதி ஏன் பொது எதிரி என்று அழைக்க வேண்டும் என்றும் கேட்க தொடங்கிவிட்டது.
இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில் திருமலைச் சம்பவமானது ஒடுக்கு முறைக்கு எதிரான விழிப்பை அதிகப்படுத்தக் கூடியது.சம்பவத்தின் பின் அங்குள்ள இளையோரின் சமூகவலைத்தளச் செயற்பாடுகளில் அதைக் காணக் கூடியதாக இருப்பதாக ஒரு சமூகச் செயற்பாட்டாளர் சொன்னார்.சம்பவத்துக்கு முன் திலீபன் யார் என்று கேட்டால் தெரியாது என்று சொல்லக்கூடிய பலரும் இப்பொழுது திலீபனைத் தேடி வாசிக்கிறார்கள் என்றுமவர் சொன்னார்.அதுமட்டுமல்ல. சம்பவத்தின் பின் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் முன்னணியுடன் தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற மணிவண்ணன் உட்பட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் முன்னணிக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள்.தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத அரசியல்வாதிகளும் சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார்கள்.நாட்டுக்கு வெளியே தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உட்பட பலரும் கண்டித்திருக்கிறார்கள்.
ஒடுக்குமுறை என்று வரும்பொழுது தமிழ்மக்கள் இனமாகத் திரள்வார்கள் என்பதனை இச்சம்பவத்தின் பின்னரான நிலமைகள் காட்டுகின்றன. இங்கேதான் முன்னணி கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விடயமும் இருக்கின்றது.
காலத்துக்கு காலம் தமிழ் மக்கள் ஏதோ ஒரு பொது நிலைப்பாட்டின் கீழ் ஆகக் கூடிய பட்சம் பெருந்திரளாகத் திரண்டிருக்கிறார்கள்.தமிழ்க் கட்சிகளால் அவர்களை அவ்வாறு திரட்ட முடியவில்லை என்பதுதான் கடந்த 14 ஆண்டு காலத் துயரம்.அவ்வாறு தமிழ்க் கட்சிகளையும் செயற்பாட்டாளர்களையும் ஒப்பீட்டளவில் ஒன்றாகத் திரட்டிய ஆகப்பிந்திய சம்பவமாக திருமலைத் தாக்குதலை கூறலாம்.
திருமலையில் முன்னணி தாக்கப்பட்ட இடம் எதுவென்று பார்த்தால் அது திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் சிங்களமயப்படுத்தப்பட்ட ஒரு பகுதிதான். கடந்த பல தசாப்தகால தமிழ் அரசியலால் அப்பகுதியை மீட்க முடியவில்லை. அதுமட்டுமல்ல,இப்பொழுது அங்கே வைத்து ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டிருக்கிறார்.கிழக்கில் தொடங்கிய நிலப்பறிப்பு திருகோணமலையில்,அம்பாறையில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வெற்றி பெற்றுவிட்டது.அது வடக்குக்கும் படர்ந்து வருகிறது.அதை எதிர்த்த காரணத்தால் முன்னணி தாக்கப்படுகிறது.
தாக்கப்பட்ட போது திருமலை யாழ் பெருஞ்சாலையில் முன்னணி ஒற்றைக் கட்சியாகத்தான் நின்றது.அதன் நாடாளுமன்ற உறுப்பினர் மிகச் சில ஆதரவாளர்களோடு காணப்பட்டார்.அந்த ஊர்தி சில வாகனங்களோடுதான் நகர்ந்து சென்றது.அது ஒரு மக்கள் மயப்பட்ட வாகனப் பேரணி அல்ல. தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியலின் ஈட்டி முனையாகக் காணப்படும் ஒரு கட்சி மிகச் சிலரோடு ஒரு தாக்குதலை எதிர்கொண்டமை என்பது எதைக் காட்டுகின்றது? அது தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியலின் பலவீனமா? அல்லது அந்தக் கட்சியின் பலவீனமா?
இதே திலீபனின் நாளில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2020ல் எல்லாக் கட்சிகளும் இணைந்து எதிர்ப்பைக் காட்டின.அப்பொழுது போலீசார் நீதிமன்றத் தடை உத்தரவின் மூலம் அந்த எதிர்ப்பு நடவடிக்கையை முறியடிக்க முயற்சித்தார்கள்.ஆனால் அங்கே ஒன்றுபட்டு நின்றதால் போலீசார் அந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
இதை இங்கு எழுதுவதன் மூலம் இக்கட்டுரையானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏனைய கட்சிகளோடு இணைந்து ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்றெல்லாம் சிறுவர் சித்திரக் கதை எழுத வரவில்லை. ஆனால்,பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் தமிழ் மக்கள் மத்தியில் புலப்பெயர்வு அதிகரித்து வரும் ஓர் அரசியல் சூழலில்,தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியல் எனப்படுவது இவ்வாறு மக்கள் மயப்படாத சிறு திரள் நடவடிக்கையாகச் சுருங்கி விட்டதை,ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு நெடுஞ்சாலையில் வைத்துத் தாக்கப்படுவதை,அவரைச் சூழ்ந்து மிகச் சில ஆதரவாளர்களே நிற்பதை, சிங்களபௌத்த அரசியலும் வெளியுலகமும் எப்படிப் பார்க்கும்?