
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா, தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் காரணமாக, தனது பதவியை துறந்துள்ளமை, இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம் காணச்செய்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா இன்றையதினம் தனது பதவியை துறந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நீதிபதி சரவணராஜா கடந்த 2023.07.04 ஆம் திகதி தனது கடமை நிமித்தம் குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை மேற்கோள்காட்டி 2023.07.07 ஆம் திகதி நாடாளுமன்ற உரையிலும், அதன்பின்னர் பொதுவெளியிலும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை, நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அவதூறுக்கு உள்ளாக்கியிருந்தார்.
அதன்பின்னர் குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கு, சட்டவரைமுறைகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியுள்ளமை இந்த நாட்டின் நீதித்துறைக்கும், ஜனநாயகத்துக்கும் விழுந்திருக்கிற சாட்டையடி.
மேலும், இதை மிகமோசமான இனவாதச் செயலாகவே கருதவேண்டியுள்ளது. இதற்கு, எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.