வைஷாலியின் கையினை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை பிறப்பித்தது.
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகையின் மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது.
சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டு
ள்ளது.
இது தொடர்பான வழக்கு கடந்த 27.09.2023)  யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஒருவர் ஊடாக உடற் கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் கோரியமைக்கு அமைய நீதிமன்றம் கட்டளையிட்டது.
பெயர் குறிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா உத்தரவிட்டார். வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிறுமியின் சார்பாக சட்டத்தரணிகள் சர்மினி பிரதீபன், லக்சன் செல்வராஜா ஆகியோர் முன்னிலையாகினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews