நீதிபதி ரி.சரவணராஜா விடயத்தில் முழுமையான உண்மைகள் கண்டறியப்பட வேண்டியுள்ள நிலையில், நாளை காலை 9.30 மணிக்கு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை நேரில் சந்திக்கவுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன அறிவித்துள்ளார்.
அத்துடன், சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரத்னம் குறித்த விடயம் சம்பந்தமாக உரிய தெளிவுபடுத்தல்களை வழங்க வேண்டும் என்பதை கோரவுள்ளதோடு, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமத்னவை வெளிப்படைத்தன்மையுடனான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரையும் பக்கச்சார்பற்ற, வெளிப்படைத்தன்மையுடனான செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்புக்களை கோரவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி சரவணராஜா, நாட்டைவிட்டு வெளியேறி இருந்தாலும், அவர் வெளிப்படுத்தியுள்ள விடயங்கள் நாட்டின் ஒட்டுமொத்த நீதித்துறை சார்ந்த விடயமாகின்றது.
ஆகவே, குறித்த விடயத்தினை அதீதமான கரிசனையுடன் கையாள வேண்டிய கட்டாயம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு உள்ளது எனவும் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.