இலங்கையில் ஏற்கனவே ஜனநாயகமும் சட்ட ஆட்சியும் பக்கசார்பாக இருந்து வரும் அரசியல் சூழலில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதிக்கு நேர்ந்துள்ள கதி ஆச்சரியம் தரும் ஒன்றல்ல என
புதிய ஜனநாயக மார்க்சிஸ லெனினிஸ கட்சி தெரவித்துள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி அச்சுறுத்தல் மற்றும் நிர்ப்பந்தம் காரணமாக பதவி விலகியது தொடர்பில் அக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனநாயகமும் சட்ட ஆட்சியும் பக்கசார்பாக இருந்து வரும் அரசியல் சூழலில் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதிக்கு நேர்ந்துள்ள கதி ஆச்சரியம் தரும் ஒன்றல்ல. ஆளும் வர்க்க உயர்மட்ட அரசியல் சக்திகளும், அரச நிறுவன உயர் அதிகாரிகளும், சிங்கள பௌத்த பேரினவாத வெறியர்களும், இதில் சம்மந்தப்பட்டிருப்பதாகவே நம்பப்படுகிறது. எனவே உண்மையான மக்கள் ஜனநாயகத் தையும், நீதி, நியாயத்தையும், ஆதரித்து நிற்கும் அனைத்து சக்திகளோடும், மக்களோடும், இணைந்து நின்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அத்துடன் இவ் அநீதிக்கு எதிராக நீதி, சட்டத்துறைகளில் இருந்து வரும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் இன, மத, பேதங்களுக்கு அப்பால் மக்கள் பக்கத்திலிருந்து உறுதியான குரல் கொடுக்க வேண்டும்.
இலங்கையின் முதலாளித்துவ மேட்டுக்குடி, ஆளும் வர்க்க சக்திகள், சிங்கள பௌத்த பேரினவாதத்தை மூலதனமாகக் கொண்டு ஜனநாயகத்தின் பெயரில் ஆட்சி அதிகாரத்தை முன்னெடுத்து வந்ததே கடந்த எழுபத்தைந்து வருட காலப் பாராளுமன்ற – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையின் நீடிப்பாகும்.
இத்தகைய தொடர் ஆட்சிகளில் எழுத்திலும், பேச்சிலும், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, என அலங்காரமாகப் கூறப்பட்டு வந்ததே தவிர நடைமுறையில் ஜனநாயக மறுப்புகளும், நவீன வழிகளிலான ஆட்சிகளுமே தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
இதனை உறுதிப்படுத்தியே இதுவரையான அரசியல் யாப்புகள் யாவும் வரையப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
பாசிச அரசியலமைப்புகளின் கீழ் நாட்டின் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும், மக்களுக்கும், ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களுக்கும், ஏனைய சிறுபின்மையினருக்கும் ஜனநாயகமும், சட்ட ஆட்சியும், நீதியும் மறுக்கப்பட்ட வையாகவே இருந்து வந்துள்ளன.
அத்தகைய சம்பவங்கள் அவ் அப்போது இடம் பெற்று வந்துள்ள போதும்! அவற்றின் ஒரு உச்ச நிகழ்வாகவே முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் மீதான அச்சுறுத்தலும் பதவி விலகலும், அதற்கான காரணங்களும், அவர் நாட்டைவிட்டுச் சென்ற நிகழ்வும் இடம் பெற்றிருக்கின்றன. இச் சம்பவத்தில் வழமை போன்று அடுத்து அதிகாரத்திற்கு வருவதற்கான காய்களை நகர்த்தும் ஆட்சி அதிகார சக்திகளின் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் கரங்கள் இருப்பதை மறைத்து விட முடியாது.
அதேவேளை இன, மத மோதல்களைத் தூண்டி, அவற்றின் ஊடாக இலங்கையில் தத்தமது வல்லரசு மேலாதிக்கங்களை நிலை நிறுத்த திரைமறைவில் இருந்து செயல்பட்டு வரும், அந்நிய உளவு நிறுவனங்கள் பற்றியும், அவற்றினால் வழிகாட்டப்படும் இன மதக் குழுக்கள் பற்றியும், மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்பதையும் எமது கட்சி சுட்டிக் காட்டுகிறது என அறிக்கை கூறுகிறது.
நன்றி.
சி.கா.செந்திவேல் பொதுச் செயலாளர்.