புத்தளத்தில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளம் தாதி ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த புத்தளம் தள வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் ஐந்து மாதக் கர்ப்பிணியான அவந்தி கருணாரத்ன எனும் இளம் தாதியே இவ்வாறு விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.
பணி நிமித்தமாக வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்த குறித்த கர்ப்பிணித் தாதி, பாதசாரி கடவையில் பயணிதேதி போது அதி வேகமாக வந்த முச்சக்கர வண்டி ஒன்று அவர் மீது மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் தாதி புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கர்ப்பிணி தாதிக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை எனவும், அதிக உள் இரத்தப்போக்கு காரணமாக அவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி அதிக மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.