
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்கள் முழுமையாக வாழும் இடத்தில் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் அமைக்கப்படும் விகாரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன விரோத செயற்பாட்டின் தொடர்ச்சியாக அரச இயந்திரத்தால் முன்னெடுக்கப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் உள்ளதாவது,
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பத்தில் இந்த விகாரை அமைப்பு இனமுரண்பாடுகளை உருவாக்க கூடும் என்பதால் அதனை தடுத்தார். ஆனால் பின்னர் அவரை மீறி சட்டவிரோதமாக இரவோடு இரவாக விகாரையின் பெயர்ப்பலகை நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதற்கு நியாயம் கேட்டு அகிம்சை வழியில் போராடிய மக்களை நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்று விரட்டியுள்ளனர். காவல்துறையினர் அத்துடன் ஊடகவியலாளர்களை அனுமதிக்காது தடுத்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு சென்று இன நல்லிணக்கம் பற்றி பேசும் ரணில் அரசாங்கம் உள் நாட்டில் அதற்கு எதிரான இன முரண்பாடுகளை அரச இயந்திரத்தின் உதவியுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தீவிரப்படுத்தி வருகின்றனர் மட்டக்களப்பு மாவட்ட மேச்சல் தரை நிலங்களை அபகரித்தல் குருந்தூர் மலை விவகாரம் திருமலை இலுப்பைக்குள விகாரை அமைப்பு என நீண்ட பட்டியல் தமிழர்களின் இருப்பை கபளீகரம் செய்ய அரச இயந்திரத்தினால் திட்டமிட்டு மேற் கொள்ளப்படுகின்றன.
வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களின் சுயாதீனம் அரச தலையீடு காரணமாக கேள்விக்குள்ளான நிலையில் நல்லிணக்கம் என்ற வெற்று வார்த்தை அத்துமீறிய விகாரைகளை அமைப்பதன் மூலம் இனவாத கோர முகம் தமிழ் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகம் பெயரளவில் இயங்க தென்னிலங்கை அரச நிர்வாகமும் பௌத்த பிக்குகளும் தாம் நினைத்ததை சட்ட எல்லையை தாண்டி அரங்கேற்றுகின்ற நிலை உருவாகியுள்ளது இது தமிழர் பிரதேசங்களில் அரச சர்வாதிகாரமாக மாறியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.