சீன புவி இயற்பியல், அறிவியல் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 உடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த ஆய்வுத் திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சீனக் கப்பலின் வருகை குறித்து அண்டை நாடான இந்தியாவை அதிருப்தியடைந்துள்ள நிலையிலேயே இந்த முடிவை ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஷி யான் 6 ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இலங்கையில் நங்கூரமிடுவதாக இலங்கை கடற்படையினர் முன்னர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும், நேற்று மாலை வரை இலங்கை அதிகாரிகளால் இராஜதந்திர மட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை.
சீன புவி இயற்பியல் அறிவியல் ஆய்வுக் கப்பல் ஷி யான் 6 இன்று மாலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 474 கடல் மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, ஷி யான் 6 ரக கப்பல், இலங்கையின் எந்தவொரு துறைமுகத்திலும் நிறுத்துவதற்கு இராஜதந்திர மட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
அது ஒரு ஆய்வுக் கப்பல் என்பதால், அது தனது ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்பும் திகதிகள் மற்றும் பகுதிகளை நாட்டின் வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ருஹுணு பல்கலைக்கழகத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில், சீன ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையை வந்தடையும் என தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் என்ற நாரா முன்னதாக தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், ஷி யான் 6 உடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இணங்கிய பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அத்துடன் மற்றைய விரிவுரையாளர் நாட்டின் பல்கலைக்கழக அமைப்பிலிருந்து முற்றாக விலகியதாகவும் ருஹுணு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.