
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, டிஜிட்டல் பொருளாதார மாற்றத்தைத் துரிதப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தொழில்நுட்ப அமைச்சு தீர்மானித்துள்ளது.


அதற்கு இணையாக அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றுபட்டு டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை செயற்படுத்தும் முறைமை ஆரம்பிக்கப்படவுள்ளது.


தற்போது தயாரிக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் பொருளாதார முறைமையின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு கிடைக்கும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதார கொள்கையினால் சர்வதேச போட்டித்தன்மைிக்க பொருளாதாரத்துடன் போட்டியிடும் வகையில் இலங்கையை தயார்படுத்த முடியும் என்பதால், அதனூடாக அடுத்த தசாப்பத்தில் இலங்கையின் வலுவான பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கான இயலுமை கிட்டும் என்றும் தெரிவித்தார்.
அதற்காக டிஜிட்டல் பொருளாதார திட்டத்தை சமூகமயப்படுத்தல் மற்றும் அது தொடர்பாக பொதுமக்களை தெளிவூட்டும் செயலமர்வுகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைவாக “DIGIECON 2030” வேலைத்திட்டம் இம்மாதம் 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குதற்கான, டிஜிட்டல் பொருளாதார திட்டமிடலொன்றை இதனூடாக தயாரிக்க எதிர்பார்த்திருப்பதோடு, டிஜிட்டல் பொருளாதார கொள்கை தயாரிப்பு பணிகள் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
டிஜிட்டல் பொருளாதார திட்டத்தினால் சர்வதேசத்தின் போட்டித்தன்மை மிக்க சூழலுக்கு ஏற்ப இலங்கையை தயார்படுத்த முடியும். அதனூடாக இலங்கைக்குள் வலுவான பொருளாதார கட்டமைப்பை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பொருளாதாரத்தினால் மொத்த தேசிய உற்பத்திக்கு 4% பங்களிப்பு கிடைக்கிறது. அதனை 2030 களில் 15 % ஆக அதிகரித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக மாநாடுகளும், செயலமர்வுகளும் நடத்தப்படவுள்ளன.” என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சின் மேலதிகச் செயலாளர் ”எம்.ஜீ.என்.எம்.விக்ரமசிங்க, DIGIECON 2023 -2030 வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் பிரசாத் சமரவிக்ரம, மென்பொருள் சேவைக்கான இலங்கைச் சங்கத்தின் (SLASSCOM) தலைவர் ஜெஹான் பேரின்பநாயகம், இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழில்துறை சங்கத்தின் (FITIS) தலைவர் இந்திக்க டி சொய்சா, இலங்கை கணினி சங்கத்தின் தலைவர் அஜந்த அதுகோரல, இலங்கை பொறியியல் நிறுவனத்தின் தலைவர் (IESL) பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்க, NERDC பணிப்பாளர் ஜெனரல் நிலாந்தி பெர்னாண்டோ, பிரித்தானிய கணினிச் சங்கத்தின் தலைவர் அலென்சோ டோல் (Mr.Alenzo Doll) ஆகியோரும் இதன்போது கருத்து தெரிவித்தனர்.