பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திலுள்ள பழுதடைந்த பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திலிருக்கும் பழுதடைந்த பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணியை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னவுக்கு ஜனாதிபதியின் செயலார் சமன் ஏக்கநாயக்க இதுகுறித்து அறிவித்துள்ளார்.

அதுவரை ரயில் நிலையத்திற்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக பத்து நாட்களுக்குள் தற்காலிக பிரவேச வீதியொன்றை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்போதுள்ள மேம்பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டும் பணியை ஐந்து மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர தேவையாக கருதி அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்திற்கு இது தொடர்பான பணியைக் கையளிக்குமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளதோடு அதற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

இதன் வடிவமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இந்த பணிகள் அனைத்தையும் இன்று முதல் ஆரம்பிக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews