தேசிய தகவல் தொழிநுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறை முகாமைத்துவத் தொழில் கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
குறித்த கண்காட்சியை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக இந்தக் கண்காட்சி, நாளை வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், தகவல் தொழில்நுட்ப தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் குறித்து அறிவை வழங்குதல், திறன் மேம்பாடு, தொழில் ஆலோசனை மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
தொழிற்துறை மற்றும் தொழில் ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை, வதிவிடப் பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான தளத்தை வழங்குவதோடு, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களால் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறைகள் குறித்த செயலமர்வுகளும் நடத்தப்படும்.
தொழில்நுட்ப அமைச்சர் கனக ஹேரத், பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஏ.டி. குணவர்தன, தொழில்நுட்ப அமைச்சின் பணிப்பாளர் அபிவிருத்தி ஜனக சம்பத் கீகியனகே, தேசிய எதிர்கால திறன் முயற்சிகள் நிறுவனத்தின் தலைவர் மது ரத்நாயக்க, மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தின் தலைவர் ஜெஹான் பேரின்பநாயகம், உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.