யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாக்குதல் சம்பவம் – பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்த நபர் மீது தாக்குதல் முயற்சியை மேற்கொண்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இன்றிலிருந்து கடமை நீக்கம் செய்யப்படுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நுழைவாயிலில் வைத்து, வைத்தியசாலைக்கு வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவமானது கண்டிக்கப்பட வேண்டியது. இந்த விடயத்தை நான் மிகவும் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளதோடு குறித்த பாதுகாப்பு கடமைகள் ஈடுபடும் தனியார் நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு காவலாளிகளையும் இன்றிலிருந்து வைத்தியசாலை பாதுகாப்பு கடமைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர்களுக்கு எச்சரித்துள்ளேன். எனினும் இவ்வாறான சம்பவங்களை இனி மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதாவது பொதுமக்கள் வைத்தியசாலைக்கு சுதந்திரமாக வந்து தமது மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் மூலம் அவை மழுங்கடிக்கப்படக் கூடாது எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தரப்பு தெரிவித்தது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள்  தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது.

சம்பவம் தொடர்பில்,  யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபரையும், தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்ட நிலையில் தாக்குதல் நடத்திய காவலாளிகள் தாங்கள் தாக்குதல் நடத்தியமை  தொடர்பில் பொலிசில் விளக்கமளித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews