யாழ்ப்பாணம் வலி வடக்கில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனுடன் சூழ உள்ள தனியார் காணிகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க திரைமறைவில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வலி. வடக்கு தெல்லிப்ழைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கீரிமலைக்குச் செல்லும் பகுதியில், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த முதல் ஆட்சியில் ஜனாதிபதி தங்குவதற்காக வலி வடக்கில் ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டது.
சுமார் 17 தனி நபர்களின் காணிகள் ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனை சூழ உள்ள வெளிப்புற பாதுகாப்பு பகுதிக்காக கையகப்படுத்தப்பட்டது.
இன் நிலையில் தற்போது உரிமையாளர்களுக்கு அறிவிக்காமலும் அவர்களின் சம்மதம் பெறப்படாமலும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கும் செயற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறித்த ஜனாதிபதி மாளிகையை வடக்கு மாகாண சபை தமக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் உரிய தரப்புக்கும் அதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை.
குறித்த மாளிகை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் அனேகமானவர்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையில் அவர்களுக்கு தெரியாமல் அதனை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் முயற்சிகள் இடம் பெற்று வருகிறது.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் உரிய கவனம் எடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.